மும்பை
அதானிக்கு தாராவி மேம்பாட்டுத் திட்டத்தைப் பிரதமர் மோடி பரிசாக அளித்துள்ளதாக காங்கிரஸ் கூறி உள்ளது.
மும்பையில் அமைந்துள்ள ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான தாராவியை மேம்படுத்துவதற்கான திட்டத்தை அத்தாணி குழுமத்துக்கு ஒப்படைத்து மகாராஷ்டிர அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இதற்குக் காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெய்ராம் ரமேஷ்,
”பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் தனது வசம் இருந்த வீட்டு வசதித்துறையை வேறு அமைச்சருக்கு ஒதுக்கீடு செய்வதற்கு முன் ரூ.3 ஆயிரத்து 69 கோடி மதிப்பிலான தாராவி குடிசை மேம்பாட்டு திட்டத்தை அதானி குழுமத்துக்கு ஒப்படைத்து உள்ளார். இந்த திட்டம் மும்பையின் முக்கியமான பகுதியில் சுமார் 600 ஏக்கரில் அமைகிறது.
முதலில் இந்த திட்டத்தின் ஒப்பந்த பணி வேறொரு நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது. பிறகு ஷிண்டே- பட்னாவிஸ் தகராறு காரணமாக அந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.
போட்டியில் மோடியின் நெருங்கிய நண்பர் அதானி மட்டுமே சாத்தியமான வெற்றியாளர் என்பதைக் காட்ட ஒப்பந்தப்புள்ளியின் நிபந்தனைகள் மாற்றி அமைக்கப்பட்டு, ஷிண்டே-பட்னாவிஸ் அரசு மிக அற்புதமான கூத்துகளை நிகழ்த்திக் காட்டி இருக்கிறது. தாராவி மேம்பாட்டுத் திட்டம் பிரதமர் மோடி தனது நண்பருக்கு அளித்த பரிசு.”
எனத் தெரிவித்துள்ளார்.