லண்டன்
விரைவில் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.
லட்சககணான ரஷ்ய ராணுவ வீரர்கள் உக்ரைன் எல்லைப் பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ளனர். ரஷ்யாவின் இந்த நடவடிக்கையால் அங்குக் கடந்த சில வாரங்களாகவே போர் பதற்றம் நிலவி வருகிறது. உக்ரைனை ரஷ்யா எப்போது வேண்டுமானாலும் தாக்கும் என அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் எச்சரித்து வருகின்றன.
இந்நிலையில் கிழக்கு உக்ரைனில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் அதிகம் கொண்ட இரண்டு பிராந்தியங்களைத் தன்னாட்சி பிரதேசங்களாக ரஷ்யா நேற்று இரவு அதிரடியாக அறிவித்தது. இந்த நடவடிக்கைக்கு உக்ரைன், அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வந்தன. இன்று அந்த இரண்டு பிராந்தியங்களிலும் ஆயிரக்கணக்கான ராணுவத் துருப்புகளை ரஷ்யா இன்று அனுப்பியது.
இதையொட்டி உக்ரைன் போர் விரைவில் வெடிக்கும் சூழ்நிலை உருவாகியிருக்கிறது. உக்ரைன் விவகாரம் தொடர்பாகப் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையில் பாதுகாப்புக் குழுக் கூட்டம் லண்டனில் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு பின்னர் போரிஸ் ஜான்சன் செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார்.
அப்போது போரிஸ் ஜான்சன், ” ரஷ்யா உக்ரைனுக்குச் சொந்தமான பிராந்தியங்களில் தனது ராணுவப் படைகளை நிறுத்தியிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏற்கனவே ரஷ்யா இதுபோன்று ஏதேனும் மோசமான செயலில் ஈடுபடும் என நான் எதிர்பார்த்திருந்தேன்.
விரைவில் ரஷ்யா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளைப் பிரிட்டன் அமல்படுத்தும். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதிஐ உக்ரைன் விவகாரத்தில் சிலர் தவறாக வழிநடத்துகிறார்கள். புதின் தனது தவற்றினை விரைவில் உணர்ந்து விடுவார்” எனக் கூறியுள்ளார்.