போபால்

மாலேகான் குண்டு வெடிப்பில் வழக்கில் சிறை சென்ற சன்னியாசினி பிரக்ஞா பாஜக வேட்பாளராக களம் இறங்குகிறார்.

ஏழு கட்டங்களாக நடைபெற்று வரும் மக்களவை தேர்தலில் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர் திக் விஜய் சிங் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் இவரை எதிர்த்து உமாபாரதி, சிவாராஜ்சிங் சவுகான், அல்லது நரேந்திரசிங் தோனம் ஆகியோரில் ஒருவர் போட்டியிடுவார் என ஊகங்கள் எழுந்தன.

இன்று பாஜக சார்பில் போட்டியிடும் 4 மத்தியப் பிரதேச மக்களவை தொகுதியின் வேட்பாளர் பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் போபால் தொகுதியில் சன்னியாசினி பிரக்ஞா சிங் தாகுர் போட்டியிடுவார் என பாஜக அறிவித்துள்ளது. உமா பாரதி உள்ளிட்டோர் இந்த தொகுதியில் போட்டியிட ஆர்வம் காட்டாததால் இந்த மாற்றம் என கூறப்படுகிறது.

கடந்த 2006 ஆம் ஆண்டு மாலேகான் பகுதியில் நடந்த குண்டு வெடிப்பில் ஆறு பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரில் சன்னியாசினி பிரக்ஞாவும் ஒருவர் ஆவார். கைதுக்கு பிறகு சில தினங்கள் சிறையில் இருந்த இவர் தற்போது ஜாமீனில் வந்துள்ளார். இவர் மீதான வழக்கு இன்னும் நடைபெற்று வருகிறது.