முட்டாள் உறவினரால் மூச்சு போன நோயாளி..
ராஜஸ்தான் மாநிலம், கோட்டாவிலுள்ள MBS மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட 40 வயது நோயாளியின் உறவினர் ஒருவர், ஏர் கூலரை இயக்க வேண்டி வென்டிலேட்டரை ஆஃப் செய்ததால், சம்பந்தப்பட்ட நோயாளி மரணமடைந்துள்ளார்.
மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் நவீன் சக்ஷேனா இப்பரிதாப சம்பவம் குறித்துக் கூறுகையில், “கடந்த திங்களன்று கொரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து இந்நோயாளி சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டார். 15-ம் தேதி இவரது குடும்பத்தினர் ஏர் கூலர் ஒன்றை வாங்கி வந்துள்ளனர். அப்போது இவரது உறவினர்களில் ஒருவர் ஓடிக்கொண்டிருந்த வென்டிலேட்டரை ஆஃப் செய்து விட்டு அந்த கனெக்சனில் ஏர் கூலரை இயங்கச் செய்துள்ளார். வென்டிலேட்டரில் பேட்டரி பேக் அப் இருந்ததால் தொடர்ந்து இயங்கி வந்துள்ளது. எனவே யாருக்கும் சந்தேகம் வரவில்லை.
அரை மணி நேரத்தில் வென்டிலேட்டரின் பேட்டரி தீர்ந்து போய் நின்றுவிட நோயாளி மூச்சுவிடச் சிரமப்பட்டதைப் பார்த்த பிறகே குடும்பத்தினரும், மருத்துவ ஊழியர்களும் டாக்டரை அழைத்துள்ளனர். ஆனாலும் அதற்குள் அந்நோயாளி அபாய கட்டத்தை எட்டியதால் காப்பாற்ற முடியவில்லை” என்று நடந்தவற்றை விளக்குகிறார்.
இது முழுக்க முழுக்க அஜாக்கிரதையால் நடந்த மரணம். இந்த தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் டியூட்டி டாக்டர் மற்றும் நான்கு மருத்துவ ஊழியர்கள் எப்போதும் தயார் நிலையில் இருந்தாக வேண்டும். அப்படி இருக்கையில் இந்த சம்பவம் எப்படி நடந்தது, உறவினர்கள் அத்தனை பேர் அங்கிருக்க, மருத்துவ ஊழியர்கள் எங்கே சென்றனர். யாரிடமும் அனுமதி பெறாமல் எப்படி ஏர் கூலரை கொண்டு செல்ல முடிந்தது என்பன போன்ற பல கேள்விகள் எழும்பியுள்ளதால், மூன்று பேர் கொண்ட குழு ஒன்றை நியமித்து இது பற்றி விசாரித்து அறிக்கை தரக் கேட்டுக்கொள்ளப்பட்டது. அறிக்கை வந்த பிறகு தவறு செய்தவர் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார் என்று உறுதி கூறுகிறார் டாக்டர் சக்ஷேனா.
இது போன்ற நுட்பமான பிரச்சினைகள் நிறைந்த இடங்களில் தேவையற்ற விசயங்களில் தலையிடுவது இப்படிப்பட்ட இழப்புகளையே ஏற்படுத்தும் என்பது உறுதியாகியுள்ளது.
– லெட்சுமி பிரியா