சான்பிரான்சிஸ்கோ
இந்திய அரசின் விமான நிறுவனமான ஏர் இந்தியாவின் போயிங் 777 ரக விமானத்தில் கதவின் அருகே விரிசல் காணப்பட்டதால் விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
இந்திய அரசு நடத்தி வரும் ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் சேவை எண் ஏஐ 183 டில்லியில் இருந்து நேரடியாக சான்பிரான்சிஸ்கோ செல்கிறது. அதைப் போல் ஏஐ 184 சான் பிரான்சிஸ்கோவில் இருந்து இந்தியாவுக்கு திரும்பி வருகிறது. நேற்று டில்லியில் இருந்து இந்த ஏஐ 183 சேவையில் போயிங் 777 ரக விமானம் ஒன்று சான்பிரான்சிஸ்கோ விமான நிலையத்தில் இறங்கியது.
அந்த விமானம் வழக்கப்படி இன்று சோதனை இடப்பட்டது. அந்த சோதனையில் இடதுபக்கம் இரண்டாம் எண் கதவின் இடதுபக்கத்தில் ஓரத்தில் ஒரு விரிசல் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த விமானம் ஏஐ 184 சேவை எண்ணில் டில்லிக்கு திரும்ப இருந்தது.
அந்த சேவை ரத்து செய்யப்பட்டு விமானம் பழுதுபார்க்கும் பணி தொடங்கி உள்ளது. இந்த விமானம் சான்பிரான்சிஸ்கோ விமான நிலைய ஊழியர்கள் மூலம் பழுது பார்க்கப்பட்டு வருகிறது. தேவைப்பட்டால் ஏர் இந்தியா தனது பணியாளர்களையும் அதற்கான பொருட்களையும் இந்தியாவில் இருந்து அனுப்ப உத்தேசித்துள்ளது.
ஏஐ184 சேவையில் மொத்தம் 210 பேர் டிக்கட் எடுத்திருந்தனர். அவர்களில் 50 பேருக்கு ஏஐ 174 சேவையில் இடம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சேவையும் சான்பிராசிஸ்கோவில் இருந்து டில்லிக்கு நேரடி சேவை ஆகும்.
மற்றும் 50 பேர் வேறு நிறுவன விமானங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். பயணிகளில் 25 பேர் பயணத்தை ரத்து செய்துள்ளனர்.
மீதமுள்ளவர்க்ள் குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.