டில்லி

நேற்று உலகின் அதிக வெப்பம் பதிவாகி உள்ள 15 நகரங்களில் 10 நகரங்கள் இந்தியாவில் அமைந்துள்ளன.

கடந்த சில வருடங்களாகவே உலகெங்கும் வெப்பம் அதிகரித்து வருகிறது.   கடந்த 1880 முதல் 2018 வரையிலான கணக்கெடுப்பில் உலகின் சராசரி வெப்ப அதிகரிப்பு 0.6 டிகிரி செல்சியஸ் ஆக உள்ள நிலையில் இந்தியாவில் அது 0.8 டிகிரி செல்சியஸ் ஆக உள்ளது.      குறிப்பாக 2018 ஆம் வருடம் அதிக வெப்பமுள்ள வருடமாக இருந்த நிலையில்  நேற்று அதை விட அதிக வெப்பம் பதிவாகி உள்ளது.

இவ்வாறு உலகெங்கும் பதிவான வெப்பத்தில் 15 இடங்களில் அதிக வெப்பம் பதிவாகி உள்ளன.  இதில் 10 இடங்கள் இந்தியாவில் அமைந்துள்ளன.  இவைகளில் பெரும்பாலானவை வட இந்தியாவில் அமைந்துள்ள நகரங்களாகும்.  டில்லி, கோட்டா, ஐதராபாத் மற்றும் லக்னோ போன்ற பல நகரங்களில்  வெப்பம் 45 டிகிரியை தாண்டி உள்ளது.

மலை நகரங்களான சிம்லா, நைனிடால், ஸ்ரீநகர் போன்ற இடங்களிலும் வழக்கத்தை விட 4 டிகிரி வெப்பம் அதிகமாக காணப்பட்டுள்ளது.  சமவெளியில் ராஜஸ்தான் மாநிலத்தில் சுரு மற்றும் ஸ்ரீகங்கா நகர் ஆகிய இடங்களில் 48.6 – 48.9 டிகிரி வரை வெப்பம் இருந்துள்ளது.  உத்திரப் பிரதேசத்தில் 47.2 முதல் 47.4 டிகிரி வரை வெப்பம் இருந்துள்ளது.

இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குனர் மிருத்யுஞ்சய் மகோபாத்ரா, “தற்போது பாகிஸ்தான் மற்றும் ராஜஸ்தான் பகுதியில் உள்ள பாலைவனத்தில் இருந்து வெப்ப காற்று தொடர்ந்து வீசி வருகிறது.   ஆகவே வட இந்தியாவில் பெரும்பாலான பகுதிகளில் வெப்பம் அதிகரித்துள்ளது.   இன்னும் இரண்டொரு நாளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதால் வெப்பம் ஓரளவு குறையும்” என தெரிவித்துள்ளார்.