டில்லி

ராஜஸ்தான் முதல்வராக சச்சின் பைலட் விரும்புவதாகக் கூறி காங்கிரஸ் மூத்த தலைவர் கபில்சிபல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களில் பாஜக தலையீட்டால் தொடர்ந்து ஆட்சி கவிழ்ப்பு நடந்து வருகிறது.  ராஜஸ்தான் சட்டப்பேரவை உறுப்பினர்கள் 200 பேரில் காங்கிரஸ் கட்சிக்கு 101 உறுப்பினர்கள் உள்ளனர்.  பாஜகவுக்கு 72 உறுப்பினர்கள் உள்ளனர்.  சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில் துணை முதல்வராகப் பதவி வகித்த சச்சின் பைலட் முதல்வருக்கு  எதிராகப் போர்க்கொடி தூக்கினார்.

தற்போது சச்சின் பைலட்டுக்கு ஆதரவாக 19 காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.   சச்சின் பைலட் மற்றும் ஆதரவாளர்கள் மீது சபாநாயகர் தகுதி நீக்க நடவடிக்கை எடுத்தார்.  அதை எதிர்த்து சச்சின் பைலட் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் சபாநாயகர் உத்தரவு ரத்து செய்யபட்டுள்ள்து.

தாம் பாஜகவில் சேரப்போவதில்லை என சச்சின் பைலட் அறிவித்த போதிலும் அவர் கடந்த 2 வாரங்களாகத் தனது ஆதரவாளர்களுடன் பாஜக  ஆளும் அரியானா மாநிலத்தில் தங்கி உள்ளார்.   இந்த விவகாரம் குறித்து அரசியல் உலகம் மிகவும் பரபரப்புடன் காணப்படுகிறது.  சச்சின் பைலட்டுக்கு  காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் பிரபல வழக்கறிஞருமான கபில்சிபல் கேள்விகள் எழுப்பி உள்ளார்.

கபில் சிபல் ”சச்சின் பைலட் முதல்வராக விரும்புகிறாரா என நான் அவரை கேட்க விரும்புகிறேன்.  அவர் பதில் சொல்லட்டும்.  எதற்கு இந்த போராட்டம்?  நீங்கள் பாஜகவில் இணையப் போவதில்லை எனக் கூறி விட்டு ஏன் பாஜக ஆளும் அரியானா மாநிலத்துக்குச் சென்று தங்கி இருக்கிறீர்கள்?  காங்கிரஸ் கட்சியின் கூட்டங்களில் ஏன் கலந்துக் கொள்வதில்லை?

நீங்கள் தனிக்கட்சி அமைக்க விரும்புகிறீர்களா?  ஏதுவாக இருந்தாலும் அரியானாவை விட்டு வெளியே வந்து வெளிப்படையாகப் பேசுங்கள்.  ஒரு விடுதிக்குள் அடைந்து கிடக்க வேண்டாம்.   உங்கள் நடவடிக்கையால் கட்சி அவமானம் அடைந்துள்ளது.   மக்கள் முன்னால் கட்சியை ஒரு தெருக்கூத்தாக மாற்ற வேண்டாம்.  உங்களுக்கு அத்தகைய எண்ணம் இருக்காது என நம்புகிறேன்.

ராஜஸ்தான் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா இந்த நேரத்தில் சட்டப்பேரவை கூட்டத்தைக் கூட்டாமல் நேரம் கடத்தி வருகிறார்.  தற்போது அரசியலமைப்பு சட்டத்துக்கு புது விளக்கம் கிடைத்துள்ளது.  ஆளுநர்கள் புது விதமாக நடந்துக் கொள்ளத் தொடங்கி உள்ளனர்.  ஆளுநர்கள் அரசியலமைப்பையும் சட்டத்தையும் பாதுகாக்க வேண்டியவர்கள் என்பது மாறி இப்போது மத்திய அரசின் கைப்பாவையாக மாறி உள்ளனர்” எனக் கூறி உள்ளார்.