ஜெய்ப்பூர்:
ராஜஸ்தானில் நடந்த ரூ.900 கோடி மதிப்புள்ள சஞ்சாவானி கடன் கூட்டுறவு சொசைட்டி ஊழல் வழக்கு தொடர்பாக மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்திடம் விசாரணை நடத்த ஜெய்ப்பூர் நீதிமன்றம், போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.

ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான முதல்வர் அசோக் கெலாட் அரசைக் கவிழ்க்கும் முயற்சியில் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் ஈடுபட்டார் என்று காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்தச் சூழலில் இந்த விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காங்கிரஸ் எம்எல்ஏக்களை வளைக்க முயன்றதாகவும், அது தொடர்பான உரையாடல் அடங்கிய ஆடியோ டேப்பை ஆதாரமாக வைத்து விசாரணை நடத்தவும் சிறப்புப் பிரிவு போலீஸார் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்துக்கு ஏற்கெனவே நோட்டீஸ் அனுப்பி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜெய்ப்பூரில் சஞ்சீவானி கடன் கூட்டுறவு சொசைட்டியில் ரூ.900 கோடி அளவுக்கு ஊழல் நடந்ததாக கடந்த ஆண்டு புகார் எழுந்தது. ஆயிரக்கணக்கான முதலீட்டாளர்கள் பாதிக்கப்பட்டனர். இது தொடர்பாக சிறப்புப் பிரிவு போலீஸார் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 23-ம் தேதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த ஊழல் வழக்கில் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், அவரின் மனைவி, உறவினர்கள் சிலரின் பெயரையும் சிறப்பு போலீஸார் சேர்த்துள்ளனர்.

இது தொடர்பான குற்றப்பத்திரிகையிலும் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் பெயரை போலீஸார் சேர்த்திருந்தனர். ஆனால், கஜேந்திர சிங் ஷெகாவத் பெயர் சேர்க்கப்பட்டதை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் நிராகரித்தது.

ஆனால், கஜேந்திர சிங் ஷெகாவத் பெயரை நீக்கியதை எதிர்த்து மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த மாவட்ட கூடுதல் நீதிபதி பவண் குமார், ஷெகாவத்தை விசாரிக்க கூடுதல் தலைமை மாஜஸ்திரேட் நீதிபதிக்கு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார். கூடுதல் நீதிபதி உத்தரவின் பெயரில் ஷெகாவத்திடம் விசாரிக்க போலீஸாருக்கு ஜெய்ப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.