திருவனந்தபுரம்
திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள போத்திஸ் மற்றும் ராமச்சந்திரன் வணிக வளாக உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
திருவனந்தபுரம் நகரில் மிகவும் பழமையான ஒரு விற்பனை நிறுவனமான ராமச்சந்திரன் வளாகத்தில் ஜவுளிக்கடை, வீட்டு அழகு சாதனங்கள், பாத்திரங்கள், ஃபர்னிச்சர்கள் என பல பிரிவுகள் உள்ளன. பல மாடிக் கட்டிடமான ராமச்சந்திரன் வளாகம் அட்டகுமங்கராவில் அமைந்துள்ளது. சமீபகாலமாக போத்திஸ் வளாகமும் புகழ்பெற்று வருகிறது. இந்த வளாகம் ஆயுர்வேத கல்லூரி அருகில் அமைந்துள்ளது.
போத்திஸ் மற்றும் ராமச்சந்திரன் ஆகிய இரு வளாகங்களிலும் வாடிக்கையாளர்கள் நுழையும் முன்பு சானிடைசர் பயன்பாடு அவசியமாக்கப்பட்டுள்ளது. இந்த வளாகங்களில் வாடிக்கையாளர்கள் நுழையும் போது வெப்பநிலை பரிசோதனை நடைபெறுகிறது. ஆனால் இரு இடங்களிலும் சமூக இடைவெளி பின்பற்றப்படுவதில்லை.
இந்த இரு வளாகங்களிலும் சமூக இடைவெளி பின்பற்ற எவ்வித அமைப்பும் செய்யப்படவில்லை. இந்த இரு வளாகங்களிலும் 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதையொட்டி சனிக்கிழமை அன்று திருவனந்தபுரம் மாவட்ட ஆட்சியர் ந்வ்ஜோத் கோசா போத்திஸ், ராமச்சந்திரன் உள்ளிட்ட பல இடங்களையும் சோதனை செய்தார்.
இதில் சமூக இடைவெளி பின்பற்றாதது உறுதி ஆனதால் இந்த இரு வளாகங்களின் உரிமங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரம் கேரள முதல்வர் பினராயி விஜயன் சமூக இடைவெளி விதிகளை மீறும் வணிகர்கள் மற்றும் வர்த்தக வளாகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.