சடலத்தைக் கொண்டு செல்ல ’டிராக்டர்’ டிரைவராக  மாறிய டாக்டர்…

தெலுங்கானா மாநிலம் பெட்டபள்ளி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கொரோனா நோயாளி சிகிச்சை பலன் இன்றி உயிர் இழந்தார்.

அந்த மருத்துவமனையில் இது, முதல் கொரோனா  உயிர் இழப்பு என்பதால், அந்த வளாகமே பீதியில் உறைந்து போனது.

ஆம்புலன்ஸ் இல்லை. ஒரு  ‘டிராக்டர்’ மட்டுமே மருத்துவமனை வளாகத்தில் நின்றது.

கொரோனா நோயாளியின் சடலத்தை மயானத்துக்குக் கொண்டு செல்ல அச்சம் காரணமாக, டிராக்டர் டிரைவர் மறுத்து விட்டார்.

நோயாளி இறந்து நான்கு மணி நேரம் ஆகிவிட்டது. உடனடியாக பிணத்தை அகற்றினால் மட்டுமே மற்ற நோயாளிகளை அனுமதிக்க முடியும் என்ற சூழலில்-

அந்த மருத்துவமனையின் டாக்டர் ஸ்ரீராம் என்பவர், தானே அந்த சடலத்தை, டிராக்டரில் ஏற்றி மயானத்துக்குக்   கொண்டு செல்வது என்று முடிவெடுத்தார்.

விவசாய குடும்பத்தைச் சேர்ந்த  டாக்டர் ஸ்ரீராம், வார இறுதி நாட்களில் தனது வயலில் விவசாய வேலை செய்வது வழக்கம்.

டிராக்டர் ஓட்டுவார்.

நோயாளியின் உறவினர்கள் நான்கு பேருக்கு முழு கவச உடை கொடுத்து அணியச்செய்தார்.

தானும் முழு கவச உடை அணிந்தார்.

சடலத்தை டிராக்டரில் ஏற்றி, கவச உடை அணிந்த   நான்கு பேரையும் டிராக்டரில் அமரச் செய்தார்.

ஸ்டீரிங் பிடித்து டிராக்டரை கிளப்பியவர், நேராக மயானத்துக்குச் சடலத்தைக் கொண்டு போய் சேர்த்தார்.

நோயாளியின் இறுதிச் சடங்குகள் முடியும் வரை மயானத்தில் இருந்த ஸ்ரீராம், அதன் பின்னரே வீட்டுக்குக் கிளம்பிச் சென்றார்.

கொரோனா நோயாளியின் சடலத்துடன் டாக்டர் ஸ்ரீராம், டிராக்டர் ஓட்டும் வீடியோ , சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவ-

உலகம் முழுவதும் இருந்து அவருக்குப் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

-பா.பாரதி.