தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் நாள்தோறும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்லும் பேருந்து நிலையம் இன்று வெறிச்சோடி காணப்படுகிறது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருக்கிறது. கொரோனா தொற்று எண்ணிக்கை 1,42,798  ஆக உயர்ந்து உள்ளது. 92,567 பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்துள்ளனர்.
ஆனால் பலி எண்ணிக்கையை பொறுத்தவரை 2000ஐ கடந்துள்ளது. மாவட்டங்களை பொறுத்த வரை செங்கல்பட்டு, மதுரை என பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உச்சத்தில் இருக்கிறது.

தர்மபுரி மாவட்டத்தில் இன்று மட்டும் 20 கொரோனா தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன. 3 பேர் கொரோனாவில் இருந்து குணம் பெற்றுள்ளனர். மருத்துவமனை மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 160 ஆக உள்ளது.
தொடரும் பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இந் நிலையில் ஊரடங்கு காரணமாக எப்போதும் பரபரப்புடன் காணப்படும் தர்மபுரி பேருந்து நிலையம் குறைவான மக்களின் நடமாட்டத்துடன் காணப்படுகிறது.

இந்த நகரத்தில் இருந்து நாள்தோறும் 50,000 பேர் மற்ற மாவட்டங்களுக்கு சென்று வருவர். தற்போது கொரோனா ஊரடங்கால் வெறிச்சோடி உள்ளது. உள்ளே இருக்கும் கடைகள் அடைக்கப்பட்டு, பேருந்துகள் இன்றி காணப்படுகிறது. பரபரப்பாகவே காணப்படும் இந்த பேருந்து நிலையம் இப்போது ஆரவாரம் இன்றி உள்ளது.