புதுடெல்லி: கடந்த 2015-16 முதல் 2019-20 வரையான மதிப்பீட்டு காலக்கட்டத்தில், தங்களின் எலக்ட்ரானிக் முறையில் சமர்ப்பிக்கப்பட்ட வரி செலுத்துதல்களை இன்னும் சரிபார்க்காத வரிசெலுத்துனர்களுக்கு, ஒருநேர தளர்வு சலுகையை அறிவித்துள்ளது வருமான வரித்துறை.
மேலும், இந்த சரிபார்ப்பு செயல்முறையை, இந்தாண்டு செப்டம்பர் 30ம் தேதிக்குள் நிறைவுசெய்யுமாறு கூறியுள்ளது வருமான வரித்துறை.
டிஜிட்டல் கையொப்பம் இல்லாமல் எலக்ட்ரானிக் முறையில் வருமான வரி செலுத்தியவர்கள், ஆதார் முறையிலான ஒன்-டைம் கடவுச்சொல் அல்லது நெட் பேங்கிங் வாயிலாக, எலக்ட்ரானிக் செலுத்தல் கணக்கில் உள்நுழைவதன் மூலமாக, சரிபார்க்க வேண்டும்.
இதுவல்லாமல், எலக்ட்ரானிக் சரிபார்ப்பு குறியீடு அல்லது அஞ்சல் வழியாக அனுப்பப்படும் முழுமையாக கையொப்பமிடப்பட்ட தாள் நகல் போன்றவற்றின் மூலமும் சரிபார்க்கலாம்.
இந்த கொரோனா காலக்கட்டத்தில், இந்த செயல்பாடுகளில் தாமதம் ஏற்படும் என்பதால், இந்தாண்டு செப்டம்பர் 30 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.