பெங்களூரு
பெங்களூரு நகரில் வீட்டு தனிமையில் வைக்கப்பட்ட 23184 பேர் தவறான முகவரி அளித்துள்ளது தெரிய வந்துள்ளது.
கொரோனா பரவுவதை தடுக்க வெளி மாநிலங்களில் இருந்து வருவோர் கட்டாயம் 14 நாட்கள் வீட்டுத் தனிமையில் இருக்க வேண்டும் எனக் கர்நாடக அரசு உத்தரவிட்டது. அதையொட்டி பலரும் வீட்டுத் தனிமையில் வைக்கப்பட்டனர். கடந்த சில நாட்களாகக் கர்நாடக மாநிலத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. இதையொட்டி மாநிலம் முழுவதும் தன்னார்வு தொண்டர்கள் மூலம் அரசு உடல்நலம் குன்றியோர் குறித்து கணக்கெடுப்பு எடுத்து வருகின்றனர்.
இந்த தொண்டர்கள் அத்துடன் வீட்டுத் தனிமையில் உள்ளவர்களின் தற்போதைய நிலையைக் குறித்தும் சோதனை செய்துள்ளனர் இந்த தொண்டர்கள் வீட்டுத் தனிமையில் உள்ள ஒவ்வொருவரையும் வீடு வீடாகச் சென்று சோதித்துள்ளனர். இவர்கள் ஒவ்வொரு 2ஆம் நாள், 5, 10, மற்றும் 14 ஆம் நாள் அன்று வீடுகளுக்குச் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அப்போது தனிமைப்படுத்தப்பட்ட பலர் அந்த குறிப்பிட்ட முகவரியில் இல்லாதது கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை 69,297 பேர் வீட்டுத் தனிமையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் 46,113 பேர் மட்டுமே சரியான முகவரி அளித்துள்ளது தெரிய வந்துள்ளது. மொத்தம் 23,184 பேர் தவறான முகவரி அளித்துள்ளனர். பல இடங்களில் தவறான முகவரியில் உள்ளவர்கள் தாங்கள் வெளியூர் சென்று வராதபோது தேவையில்லாமல் விசாரிப்பதாக புகார் அளித்துள்ளனர்.