சாத்தான்குளத்தில் இருந்து ‘’சாத்தான்’’ நீக்கப்படுமா?

காவல்நிலையத்தில் இரு வியாபாரிகள் உயிர் இழந்த சம்பவத்தால், சாத்தான்குளம், உலகம் முழுக்க அறியப்படும் நகரமாக ஒரே நாளில் ’பெயர்’ வாங்கியுள்ளது.
தங்கள் ஊர் பெயரில் உள்ள ‘சாத்தான்’’ என்ற வார்த்தை கெடுதல் விளைவிக்கும் சாத்தானை நினைவு படுத்துவதால், ‘’சாத்தான்’’ என்ற பெயரை நீக்க வேண்டும் என ஊர் மக்கள் திடீர் கோரிக்கை வைத்துள்ளனர்.
பாண்டிய நாட்டை குலசேகர பாண்டியன் என்ற மன்னன் ஆட்சி செய்த போது, இந்த பகுதியில் உள்ள பல கிராமங்களை நிர்வாகம் செய்து வந்தான், சாதன் சாம்பவன் .
அவன், இந்த ஊர் பெண்ணை காதலித்துள்ளான். இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்ணின் குடும்பத்தார், சாதன் சாம்பவனைக் கொன்று விட்டனராம்.
இதனை அறிந்த அந்த பெண் ‘’ உங்கள் குலத்தைச் சாத்தான் சும்மா விட மாட்டான்’’ எனத் தனது குடும்பத்தைச் சபித்துள்ளார்.
அது இன்று வரை தொடர்வதாக ஊரார் கதை சொல்வது ஒரு புறம் இருக்க-
‘’இந்த ஊரின் பெயர் ஆரம்பத்தில் சாத்தான் குளமே அல்ல’’ என்கிறார், இந்த ஊரைச் சேர்ந்த வழக்கறிஞர் வேணுகோபால்.
‘’ இந்த ஊர் 17 ஆம் நூற்றாண்டு வரை ‘வீர மார்த்தாண்ட நல்லூர்’ என்று தான் அழைக்கப்பட்டது. இங்குள்ள சந்தையில் இருந்து  மாட்டு வண்டிகளில் பொருட்களை ஏற்றிப் பிற இடங்களுக்குக் கொண்டு போய் விற்றனர்.
‘சாது’’ என்பது மாட்டு வண்டியைக் குறிக்கும். ’குளம் ‘ என்பது, ’’சந்தை’’.
இதனால் ‘சாது குளம்’’ என அழைக்கப்பட்ட இந்த ஊர் பிற்காலத்தில் ‘ சாத்தான்குளம்’’ என மருவி விட்டது’’ என்கிறார், அந்த வழக்கறிஞர்.
‘’ எங்கள் ஊர்ப் பெயரில் உள்ள ‘சாத்தான்’ என்ற வார்த்தை ‘மரணம்’ ‘ மர்டர்’ போன்ற அமங்கலமான பொருள் தருவதால், ஊர்ப் பெயர் , பழைய பெயரில் அழைக்கப்பட வேண்டும்’’ என்கிறார்கள், நகரத்து இளைஞர்கள்.
‘’ ஊர்ப் பெயரை மாற்றக் கருத்துக் கணிப்பு நடத்தினால், பெரும்பாலானோர், பெயர் மாற்றத்துக்கு வாக்களிப்பார்கள்’’ என்பது அவர்கள்  கருத்து.
-பா.பாரதி.