சூரத்: சூரத்தில் மாஸ்க் அணியாமல் சென்ற அமைச்சர் மகனை தடுத்த பெண் காவலர் பணியிடமாற்றம் செய்யப்பட, அதை ஏற்காத அவர் தமது வேலையை ராஜினாமா செய்தார்.
குஜராத் மாநிலத்தின் சூரத் கொரோனா மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்றாகும். இங்கு தொடர்ந்து கொரோனா தொற்றுகள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.
இதைக் கருத்தில் கொண்டு, மாவட்டத்தில் அதிக கெடுபிடிகள் அமலில் உள்ளன. இந் நிலையில், இரவு நேரத்தில் மாஸ்க் இல்லாமல் ஊரடங்கு விதிகளை மீறி சில இளைஞர்கள் சென்றுள்ளனர். அவர்களை பணியில் இருந்த பெண் காவலர் சுனிதா யாதவ் என்பவர் பிடித்து விசாரித்துள்ளார்.
உடனடியாக அந்த இளைஞர்கள் சுகாதார அமைச்சர் குமார் கனானியின் மகன் பிரகாஷ் கனானியின் நண்பர்கள் என்று கூறி உள்ளனர். ஆனால் நேர்மை தவறாத அந்த பெண் காவலர் அதை ஏற்கவில்லை.
உடனடியாக அவர்கள் தாங்கள் யார் என்று கூறி அவரை மிரட்டியதாக தெரிகிறது. பின்னர் அந்த இளைஞர்கள் சுகாதார அமைச்சர் மகன் பிரகாஷ் கனானியிடம் கூறி உள்ளனர். அவர் உடனடியாக தமது தந்தையும், அமைச்சருமான குமார் கனானியிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, சம்பவ இடத்தில் நேர்மையாக பணியில் இருந்த பெண் காவலரை செல்போனில் தொடர்பு கொண்ட அமைச்சர் குமார் கனானி உடனடியாக அனைவரையும் விடுவிக்குமாறு கூறி உள்ளார். ஆனால் அதை ஏற்காத காவலர் சுனிதா யாதவ் சட்டம் என்பது அனைவருக்கும் ஒன்று. எனது பணியினை செய்ய விடுங்கள் என்று கூறி உள்ளார்.
ஆனால், அதை ஏற்காத அமைச்சர் தொடர்ந்து காவலரிடம் பேசிய வண்ணம் இருந்திருக்கிறார். ஒரு கட்டத்தில் கடமையில் அதிகாரமும், அமைச்சரும் குறுக்கீடு செய்ய, இது குறித்து உயரதிகாரிகளும் அவரை கண்டித்துள்ளனர். உயரதிகாரிகளின் நெருக்கடியால் தமது வேலையை சுனிதா யாதவ் ராஜினாமா செய்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பான தொலைபேசி உரையாடல் அடங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.