நினைவில் நிற்கும் நான்கு ‘என்கவுண்டர்கள்’’..

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் ரவுடி விகாஸ் துபே என்கவுண்டரில் கொல்லப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 12 ஆண்டுகளில் நாடு முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்ட நான்கு என்கவுண்டர்களை இங்கே நினைவு கூறலாம்.

# வாராங்கல் என்கவுண்டர்( 2008)

ஒன்றுபட்ட ஆந்திர மாநிலம் வாராங்கல்லில் உள்ள பொறியியல் கல்லூரியில் படித்து வந்த 2 மாணவிகள் மீது 2008 ஆம் ஆண்டு டிசம்பரில் 3 இளைஞர்கள் ஆசிட் வீசிய சம்பவம், ஆந்திராவை மட்டுமின்றி இந்தியா முழுக்க கொந்தளிப்பை உருவாக்கியது.

இந்த கொடூர நிகழ்வு தொடர்பாக சீனிவாசராவ், ஹரி, சஞ்சய் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.  போலீசிடம் இருந்து தப்பி ஓட முயன்றபோது மூவரும் என்கவுண்டரில் பலியானார்கள்.

# திருப்பதி என்கவுண்டர்(2015)

ஆந்திர மாநிலம் திருமலையில் உள்ள சேஷாசலம் வனப்பகுதியில் செம்மர கடத்தல் காரர்களைப் பிடிக்க அதிரடிப்படையினர் சென்றபோது , அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. செம்மரம் வெட்டிய 100 பேர் காவலர்களைச் சூழ்ந்து கொண்டு கோடாரி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்பட்டது. அப்போது நடந்த என்கவுண்டரில் 20 கடத்தல் காரர்கள் பலியானார்கள்.

அவர்கள் அனைவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.

# போபால் என்கவுண்டர் ( 2016)

மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் உள்ள ஜெயிலில் தடை செய்யப்பட்ட சிமி இயக்கத்தினர் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டிருந்தனர்.

சிறையை உடைத்து விட்டுத் தப்பி ஓடிய அவர்களைச் சிறைக் காவலர்கள் விரட்டி சென்றனர். சரண் அடைய மறுத்ததால் தப்பி ஓடிய 8 பேர் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

# ஐதராபாத் என்கவுண்டர்( 2019)

ஐதராபாத்தில் கால்நடை மருத்துவராகப் பணி புரிந்த திஷா, வேலை முடிந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் தேதி இரவு  வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

புறநகர்ப் பகுதியில் உள்ள சுங்கச்சாவடி அருகே அவரை 4 ‘மிருகங்கள்’’ பாலியல் பலாத்காரம் செய்து கொன்றனர்.

ஐதராபாத்- பெங்களூரு சாலையில் ஒரு பாலத்தின் கீழ் சடலத்தைப் போட்டு விட்டு ஓடிவிட்டனர்.

இந்த குரூர சம்பவம் தொடர்பாக 2 லாரி டிரைவர்களும், 2 தொழிலாளர்களும் கைது செய்யப்பட்டனர்.

சம்பவம் நடந்த இடத்துக்கு நால்வரும், விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டனர். தப்பிச் செல்ல முயன்ற போது அவர்கள் நால்வரும்  என்கவுண்டரில் வீழ்த்தப்பட்டனர்.

-பா.பாரதி