நாகர்கோவில்:
2021ல் திட்டமிட்டபடி தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை நடத்த வேண்டும் என தமிழக அரசுக்கு முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இன்று நாகர்கோவிலில் உள்ள தனது அலுவலகத்தில், வீரன் அழகுமுத்துக்கோன் குரு பூஜையை முன்னிட்டு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது
தாய் மண்ணின் உரிமைக்காகவும், சுதந்திரத்திற்காகவும் போராடிய மாவீரன் அழகு முத்துக்கோன் அவர்களின் குரு பூஜை தினத்தில் அவர்தம் நினைவை போற்றுவோம் என்று கூறினார்.
மேலும், மக்களிடையே கொரோனா, டிக்டாக் இந்த இரண்டு விஷயங்களிலும் மக்களுக்கு விழிப்புணர்வு தேவை என்று வலியுறுத்தியவர், தற்போது இந்திய அளவில் மிகப்பெரிய பேசுபொருளாக இருக்கக்கூடிய விஷயங்களில் டிப்டாக் தடையும், கொரோனாவும் இடம்பெற்றுள்ளது.
இது இரண்டும் மக்களிடையே சாதாரணமாக பேசக்கூடிய பேச்சுக்கள். இதைத் தாண்டி பலர் இந்த இரண்டு விஷயங்களையும் அரசியலாக்கி பேசி வருகின்றனர் என்று குற்றம் சாட்டினார்.
தமிழகத்தில், வருகின்ற 2021ல் திட்டமிட்டபடி தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வெற்றிகரமாக நடத்தி முடிப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்தவர், கொரோனாவை பொறுத்தவரையில் அனைத்து கட்சியினருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது அனைவருக்குமான பாதிப்பு, இதனை அரசியலாக்க வேண்டாம். டிக் டாக்கை பொறுத்தவரையில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு தேவை.
இவ்வாறு அவர் கூறினார்.