கடலூர்: பண்ருட்டியில் போலி வங்கி துவங்க திட்டம் தீட்டிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஊரடங்கு காலத்தில் கடுமையான பொருளாதார நெருக்கடியில் பலர் சிக்கி தவித்து வருகின்றனர். முன்னணி நிறுவனங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
ஏராளமானோர் வேலையின்றி ஊரடங்கால் வருமானம் இன்றி தவித்து வருகின்றனர். இந் நிலையில் பண்ருட்டியில் வித்தியாசமாக போலி வங்கி தொடங்க முயற்சித்த 3 பேர் சிக்கி இருக்கின்றனர்.
அது பற்றிய விவரம் வருமாறு: கடலூர் மாவட்டம் பண்ருட்டி எல்.என்.புரத்தை சேர்ந்தவர் கமல்பாபு. இவர் தம்மை ஒரு வங்கி மேலாளர் என கூறி வந்துள்ளார். பண்ருட்டி நார்த் பஜார் பாரத ஸ்டேட் வங்கி என்ற பெயரில் போலி அவணங்களையும் தயார் செய்து இருக்கிறார்.
வங்கி கிளை போன்று ரப்பர் ஸ்டாம்ப், பணம் செலுத்தும் படிவம், பணம் எடுக்கும் படிவம் உள்ளிட்டவையும் அவரிடம் இருந்துள்ளது. கமல்பாபு, வங்கி தொடங்குவதற்காக இடம் பார்த்து வந்தார். பின்னர் அதற்கான முழு கட்டமைப்பையும் ஏற்படுத்தி இருந்துள்ளார்.
இது பற்றிய தகவலை அறிந்த, அப்பகுதியில் உள்ள சிலர் ஸ்டேட் பாங்க் முதன்மை மேலாளர் வெங்கடேசனிடம் தெரிவிக்க, அவரும் சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்று பார்த்துள்ளார். ஒரு வங்கி எப்படி இருக்க வேண்டுமோ, அதற்கான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டிருப்பதை கண்டு அதிர்ந்தார்.
இது குறித்து அவர் போலீசில் புகார் தெரிவித்துள்ளார். இதையடுத்து, போலி வங்கி துவங்க இருந்த கமல்பாபு உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கமல் பாபுவின் பெற்றோர், ஓய்வுபெற்ற வங்கி அதிகாரிகள். அவரது தந்தை 10 ஆண்டுகளுக்கு முன்பே காலமாகி, தாயார் 2 ஆண்டுகளுக்கு முன்பு வங்கி பணியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். அவர்கள் வங்கியில் வேலை செய்வதை பார்த்து வளர்ந்த அவர், போலி வங்கியை துவங்க திட்டமிட்டு இருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.