சாத்தான்குளம்:
நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த விவகாரம் குறித்து விசாரணைமேற்கொண்டுள்ள சிபிஐ, இன்று சாத்தான்குளத்தில் உள்ள உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தியது.
சாத்தான்குளத்தில் ஊரடங்கை மீறி கடையை திறந்தாக கூறி விசாரணைக்கு அழைத்துச் செல்லப் பட்ட தந்தை மகன், காவல்துறையினரின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலால் உயிரிழந்தனர். இந்த சம்பவம் உலகம் முழுவதும் கடும் விமர்சனத்தை எதிர்கொண்ட நிலையில், உயர்நிதிமன்றத்தின் உத்தரவின்பேரில் சிபிசிஐடி அதிரடியாக விசாரித்து 10 காவல்துறையினரை கைது செய்து சிறையில் அடைத்தது. தமிழகஅரசும், வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றியது.
இதையடுத்து, வழக்கை ஏற்றுக்கொண்ட சிபிஐ விசாரணையை முடுக்கி விட்டுள்ளது. நேற்று டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் 7 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் மதுரை வந்தனர். பின்னர் அங்கிருந்து கார் மூலம் தூத்துக்குடி சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்துக்கு மாலை 4 மணிக்கு வந்தனர்.
அவர்களிடம் சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணை, ஆவணங்களை, சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் முன்னிலையில் சி.பி.ஐ. கூடுதல் சூப்பிரண்டு விஜயகுமார் சுக்லாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து ஆவணங்கள் குறித்து ஆய்வு செய்த சிபிஐ அதிகாரிகள், அது தொடர்பாக சிபிஐ காவல்துறையினரிடமும் விளக்கம் கேட்டறிந்தனர்.
இதையடுத்து நேரடி விசாரணைக்கு செல்வதாக அறிவித்த நிலையில், இன்று காலை சிபிஐ அதிகாரிகள் சாத்தான்குளம் சென்றனர். அங்கு உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினரை சந்தித்து விசாரணை நடத்தினார். மேலும் பலரிடம் விசாரணை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது.