கல்லூரி செமஸ்டர் தேர்வுகளை நடத்த மாநிலங்களுக்கே அதிகாரம் வழங்க வேண்டும் என மத்தியஅரசுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதி உள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா பரவல் தடுப்பு காரணமாக, 6வது கட்டமாக ஜூலை 31ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஆனால், பல்வேறு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு உள்ளதால், பல மாநிலங்களில் கல்வி போதனை ஆன்லைன் மூலம் நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முக்கியமான கல்லூரி தேர்வுகளை நடத்த யுஜிசி அறிவுறுத்தி உள்ளது. அதன்படி, நாடு முழுவதும் கல்லூரிகளில் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை நடத்த உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்தது.
இதனையடுத்து, கல்லூரிகளில் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை செப்டம்பர் மாதத்திற்குள் நடத்த வேண்டும் என யுஜிசி தெரிவித்துள்ளது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை மந்திரி ரமேஷ் பொக்ரியாலுக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில், செப்டம்பர் மாதத்திற்குள் கல்லூரி இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை நடத்த முடியாத சூழல் தமிழகத்தில் நிலவி வருவதாகவும், அதனால், செமஸ்டர் தேர்வுகளை எப்போது நடத்துவது என்பதை மாநில அரசுகளே தீர்மானிக்க அதிகாரம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.