சூரத்

குஜராத் மாநிலம் சூரத் நகரில் வைரம் பட்டை திட்டும் பணி செய்யும் தொழிலாளர்கள் பணி இன்மையால் அங்கிருந்து வெளியேறுகின்றனர்.

நாடெங்கும் கொரோனா தாக்குதல் மிகவும் அதிகமாக உள்ளது.   மிக அதிகமாகப் பாதிக்கப்பட்ட 5 மாநிலங்களில் குஜராத் மாநிலமும் ஒன்றாகும்.  இம்மாநிலத்தில் நேற்றைய கணக்கின்படி 39,280 பேர் பாதிக்கப்பட்டு 2009 பேர் உயிர் இழந்துள்ளனர். அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் குஜராத் மாநிலம் 4 ஆம் இடத்தில் உள்ளது.

குஜராத் மாநிலத்தில் முக்கிய தொழில்களில் ஒன்று வைரம் பட்டை திட்டுவதாகும்.  கடந்த மார்ச் மாதம் முதல் இந்த தொழில் முழுவதுமாக முடங்கி உள்ளது. சூரத் நகர் மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் இவை அதிகம் நடைபெறுகின்றன.   சுமார் 100 நாட்களுக்கும் மேலாக இந்த தொழிற்சலிகள் மூடப்பட்டுள்ளதால் பல தொழிலாளர்கள் பணி இழந்துள்ளனர்.   வாழ்வாதாரத்தை இழந்த இவர்கள் கூட்டம் கூட்ட,மாக சூரத் நகரை விட்டு வெளியேறுகின்றனர்.

சூரத் நகர் வைரம் பட்டை திட்டும் தொழிலாளர் அமைப்பின் தலைவர் ஜெய்ஷுக் கஜேரியா, “சூரத் நகரில் மொத்தம்  9 ஆயிரத்துக்கும் அதிகமான வைரம் பட்டை தீட்டும் தொழிற்சாலைகள் இயங்கி வந்தன.  இவற்றில் 6 லட்சத்துக்கும் அதிகமானோர் பணி புரிகின்றனர்.  கடந்த மார்ச் மாதம் கொரோனாவால் மூடப்பட்ட பல  தொழிற்சாலைகள் இன்று வரை திறக்கப்படாமல் உள்ளன.

ஒரு சில தொழிற்சாலைகள் ஜூன் மாதம் திறக்கப்பட்ட போதிலும் அதில் பணி புரிந்த 600க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். ஆகவே மீண்டும் தொழிற்சாலைகள் மூடப்பட்டன, இந்த மாதம் 13ஆம் தேதி வரை தொழிற்சாலைகளை மூட சூரத் மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

வருமானம் இழந்த தொழிலாளர்கள் சூரத்தில் இருந்து வெளியேறி வருகின்றனர்.   தினசரி சுமார் 6000 பேர் நகரை விட்டு வெளியேறுகின்றனர்.   இதுவரை சுமார் 70%க்கும் அதிகமானோர் வெளியேறி விட்டனர்.  இனி அவர்கள் திரும்ப வர நினைத்தாலும் அவர் குடும்பத்தினர் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.” என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.