டெல்லி: நீட் தேர்வு மற்றும் பல்கலைக்கழக நுழைவு தேர்வு நடத்துவதற்கான பாதுகாப்பு வழிமுறைகள் மத்திய அரசு வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: தேர்வு நடக்கும் போது மாணவர்களுக்கு வெப்பநிலை பரிசோதானை கட்டாயம் நடத்தப்பட வேண்டும்.
தேர்வு கண்காணிப்பாளருக்கு உடல்நிலை சான்றிதழ் அவசியம் வழங்கப்பட வேண்டும். மாணவர்களுக்கு புதிய முகக்கவசங்கள், கையுறைகள் வழங்க வேண்டும். தேர்வு மைய சுவர்கள், கதவுகள், ஜன்னல்கள் உள்ளிட்ட இடங்களில் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
மாணவர்கள் உட்கார்ந்து தேர்வு எழுதும் இருக்கைகள் கிருமிநாசினியினால் சுத்தம் செய்யப்பட வேண்டும். மாற்று திறனாளி மாணவர்களுக்கான சக்கர நாற்காலிகளும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட வேண்டும்.
மாணவர்களின் இருக்கை எண்கள் ஸ்டிக்கர், பெயிண்ட் மூலம் குறிப்பிட வேண்டும். தேர்வுக்கூடங்களில் வைக்கப்பட்டு இருக்கும் குப்பை தொட்டிகளை அடிக்கடி சுத்தப்படுத்த வேண்டும்.
தேர்வு மையத்திற்கு வரும் மாணவர்கள், பெற்றோர்கள் வரும் போது கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். தேர்வு முடிந்த பின்னர் அனைத்து இருக்கைகளும் கிருமி நாசினியால் சுத்தம் செய்யப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, நீட் தேர்வு செப்டம்பர் 13 ம் தேதியும், ஜேஈஈ தேர்வு செப்டம்பர் 6ம் தேதியும் நடத்தப்படும் என்று மத்திய மனித வளத்துறை மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் அறிவித்திருந்தார்.