தெலுங்கானா முதல்வருக்கு கொரோனா இருப்பதாகச் செய்தி  வெளியிட்ட பத்திரிகை மீது வழக்கு..



தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து வெளிவரும் ‘Aadap’ என்ற தெலுங்கு நாளிதழில் அண்மையில் வெளியான செய்தி ஒன்று அந்த மாநிலத்தை அதிர வைத்தது.

’’தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் தனது பண்ணை வீட்டுக்குச் சென்றுள்ளார்’’ என்று அந்த பத்திரிகை குறிப்பிட்டிருந்தது.

இந்த செய்தி, அங்குள்ள சமூக வலைத்தளங்களிலும்  வெளியாகி  வைரலானது.

இது குறித்து ஐதராபாத்தில் உள்ள ஜுப்ளிஹில்ஸ் பகுதியில் வசிக்கும் முகமது இலியாஸ் என்பவர் போலீசில் புகார் அளித்தார்.

‘’தெலுங்கானா முதல்வர் உடல் நலம் குறித்து ’’ஆதாப்’’ பத்திரிகை பொய்ச்செய்தி வெளியிட்டுள்ளது.இதனால் அந்த பத்திரிகை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று அந்த புகாரில் இலியாஸ் குறிப்பிட்டிருந்தார்.

இந்த புகாரை ஏற்று அந்த பத்திரிகை மீது ஜுப்ளிஹில்ஸ் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

புகாரின் அடிப்படையில் அந்த பத்திரிகை ஆசிரியர் வெங்கடேஷ்வர் ராவை , காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

-பா.பாரதி.