புதுடெல்லி: கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பருவத் தேர்வுகளை, தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நடத்தலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதியளித்துள்ளது.
அந்த அறிவிப்பு வெளியான அடுத்த சில மணிநேரங்களில், பருவத் தேர்வுகள் நடத்துவது தொடர்பாக புதிய வழிகாட்டு நெறிமுறைகளை பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டுள்ளது. இதனையடுத்து, நிறுத்திவைக்கப்பட்ட தேர்வுகள், செப்டம்பரில் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில், மத்திய உயர்கல்வித் துறை செயலருக்கு இதுதொடர்பாக கடிதம் எழுதப்பட்டுள்ளது. இறுதிப் பருவத் தேர்வுகள், பல்கலை மானியக்குழுவின் பரிந்துரைகளை கட்டாயம் பின்பற்றி, அதனடிப்படையில் நடத்தப்பட வேண்டுமென அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கடந்த ஏப்ரலில் வெளியான அகடமிக் காலண்டர் மற்றும் விதிமுறைகளை மீண்டும் ஆய்வுசெய்து திருத்தங்களை மேற்கொள்ளுமாறு மத்திய மனிதவள அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், பல்கலைக்கழக மானியக்குழுவை கேட்டுக்கொண்டுள்ளார்.
“கடந்த ஜூலை மாதம் நடைபெறவிருந்த இறுதிப் பருவ தேர்வுகள், இந்த 2020ம் ஆண்டின் செப்டம்பர் மாத இறுதியில் நடைபெறவுள்ளன” என்று அவரின் மற்றொரு டிவிட்டர் பதிவு தெரிவிக்கிறது.
புதிய விதிமுறைகளின்படி, பல்கலைக்கழக இறுதித் தேர்வுகள், ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் முறையில் நடைபெறலாம். ஒருவேளை, செப்டம்பர் மாத தேர்வில் மாணாக்கர்கள் கலந்துகொள்ள இயலவில்லை எனில், தேர்வு பிறகு எழுதிக்கொள்ள முடியும் என்றும் தொடர்புடைய செய்திகள் தெரிவிக்கின்றன.