உலக மக்கள் அனைவரையும் ஒரு வழியாக்கிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் எவ்வாளவு கொடியது என்பதையும், அதனைக் கட்டுப்படுத்தும் வழிகளையும் அறிய விஞ்ஞானிகள் அனைவரும் தலையைப் பிய்த்துக் கொண்டுள்ளனர் என்று கூறினால் அது மிகையாகாது. இப்போதைக்கு அனைவரிடமும் உள்ள மிக நிலையான, நம்பத் தகுந்த தகவல் என எடுத்துக் கொண்டால் அதன் நேரடியாக பாதிக்கப்பட்டவகள் மற்றும் உயிரிழந்தவர்கள் பற்றிய கணக்கீடுகள் மட்டுமே. ஆனால், அதை மட்டும் வைத்துக் கொண்டு கொரோனாவின் கொடிய பண்புகளைக் கணக்கிடுதல் மற்றும் அட்டவணைப்படுத்துதல் என்பது சவாலான காரியமே!
தற்போதைய தனித்துவ கொரோனா வைரஸ் போன்ற வளர்ந்து வரும் வைரஸ் தொற்றுகளை பற்றிய பல முக்கிய கேள்விகளில் ஒன்று, அது எவ்வளவு கொடியது என்பதுதான். பல மாதங்கள் தகவல்கள் சேகரித்த பின்னர், விஞ்ஞானிகள் ஒரு பதிலைப் பெறும் முனைப்பில் உள்ளனர். அதற்காக, இந்த தொற்றின் மூலம் உண்டாகியுள்ள இறப்பு விகிதத்தை (ஐ.எஃப்.ஆர்) பயன்படுத்துகின்றனர்.
லண்டனின் இம்பீரியல் கல்லூரியின் தொற்றுநோயியல் நிபுணர் ராபர்ட் வெரிட்டி கூறுகையில், “ஐ.எஃப்.ஆர் என்பது கூட்டு நோய் எதிர்ப்பு சக்தியின் வரம்பு ஆகும். இது ஒரு தொற்றுநோய் பரவும் அளவு, அதன் பாதிக்கும் தன்மை மற்றும் நாம் அதை எவ்வளவு தீவிரமாக கருத வேண்டும் என்று நமக்கு உணர்த்தக் கூடிய முக்கியமான கணக்கீடு ஆகும்.
கொரோனா போன்ற ஒரு பெருந்தொற்றில்ஒரு துல்லியமான ஐ.எஃப்.ஆரைக் கணக்கிடுவது சவாலானது. ஏனெனில் இது சோதனை மூலம் உறுதிப்படுத்தப்பட்டவர்கள் மட்டுமின்றி, பாதிக்கப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கையை அறிந்து கொள்வதை நம்பியுள்ளது. ஆனால் SARS-CoV-2 வைரஸால் ஏற்படும் நோயான COVID-19 க்கு இறப்பு விகிதம் அறிந்துக் கொள்வது மிகவும் கடினம் என்று லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜீன் அண்ட் டிராபிகல் மெடிசின் கணித தொற்றுநோயியல் நிபுணர் திமோதி ரஸ்ஸல் கூறுகிறார். ஏனெனில், லேசான அல்லது அறிகுறிகள் இல்லாத பலர் சோதனைக்கு உட்படாமல் இருப்பதால் அவர்களைப் பற்றிய கணக்கீடுகள் இல்லை. மேலும் நோய்த்தொற்றுக்கும் இறப்புக்கும் இடையிலான நேரம் இரண்டு மாதங்கள் வரை இருக்கலாம். பல நாடுகளும் வைரஸ் தொடர்பான அனைத்து இறப்புகளையும் கணக்கிட போராடி வருகின்றன என்று அவர் கூறுகிறார். பல நாடுகளில் அதிகாரபூர்வ எண்ணிக்கையில் பல மரணங்கள் பதிவு செய்யப்படாமல் போயிருக்கின்றன.
தொற்றுநோய்களின் ஆரம்பகால கணக்கீடுகள் வைரஸ் எவ்வளவு ஆபத்தானது என்பதை மிகைப்படுத்தி கூறியது. பின்னர் கண்டறியப்பட்ட பல பகுப்பாய்வுகள் அதன் இறப்பைக் குறைத்து மதிப்பிட்டன. இப்போது, பல ஆய்வுகள் – பல முறைகளைப் பயன்படுத்தி – பல நாடுகளில் COVID-19 உள்ள ஒவ்வொரு 1,000 பேருக்கும் 5 முதல் 10 பேர் இறப்பார்கள் என்று மதிப்பிடுகின்றனர். “எனக்கு எந்த நம்பிக்கையும் இல்லாத ஆய்வுகள் கூட, 0.5-1% வரை மதிப்பிட்டுள்ளது,” என்று ரஸ்ஸல் கூறுகிறார்.

ஆனால், சில ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுகள் இடையே ஒன்றிணைவது தற்செயலானதாக இருக்கலாம் என்று கூறுகிறார்கள். வைரஸ் எவ்வளவு கொடியது என்பதைப் பற்றிய உண்மையான புரிதலுக்கு, விஞ்ஞானிகள் வெவ்வேறு குழுக்களின் மக்கள் எவ்வளவு எளிதில் இறப்புக்கு ஆளாகிறார்கள் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். COVID-19 இலிருந்து இறக்கும் ஆபத்து வயது, இனம், சுகாதார வசதிகள், சமூக பொருளாதார நிலை மற்றும் அடிப்படை சுகாதார நிலைமைகளைப் பொறுத்து கணிசமாக மாறுபடும். எனவே, வெவ்வேறு குழுக்களிடையே உயர் தரமான ஆய்வுகள் தேவை என்று இந்த ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
ஐ.எஃப்.ஆர் எனபது காலப்போக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிப்பதில் மருத்துவர்கள் சிறந்து விளங்குவதால் மாறலாம். இது இறப்பின் சதவிகிதத்தை கணக்கிடுவதில் மேலும் ஒரு சிக்கலாக விளங்குகிறது.
இறப்பு விகிதத்தை மிக சரியாகக் கணக்கிடுவது மிகவும் முக்கியம், ஏனெனில் இது அரசாங்கங்களுக்கும் தனிநபர்களுக்கும் பொருத்தமான நடவடிக்கைகளைத் தீர்மானிக்க உதவுகிறது. “ஒரு ஐ.எஃப்.ஆரை மிகக் குறைவாகக் கணக்கிடும்போது, சமொக்கத்திர்க்கு தேவையான நடவடிக்கைகளின் தீவிரம் குறைவாக திட்டமிடப்படலாம். அதே சமயம் பாதிப்பின் சதவிகிதம் அதிகமாகக் காட்டப்பட்டால், திறன் மிகுந்த நடவடிக்கைகள் அதிகப்படியான நிதி வசதியுடன் திட்டமிடப்படலாம். மேலும் நிலைமை மிகவும் மோசமாக உணரப்பட்டால், ஊரடங்கு போன்ற தீவிரமான நடவடிக்கைகள் செயல்படுத்தப்படலாம்,” என்று சான்றுகளை அடிப்படையாகக் கொண்ட மருத்துவத்தைப் படிக்கும் மற்றும் பாண்ட் பல்கலைக்கழகத்தில் பிஎச்டி மாணவராக இருக்கும் ஹில்டா பாஸ்டியன் கூறுகிறார்.
இடைவெளியை நிரப்புதல்
சீனாவின் மொத்த உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கையிலிருந்து கொரோன வைரஸின் கொடியத் தன்மை முதன் முதலில் உணரப்பட்டது. பிப்ரவரி மாதத்தின் பிற்பகுதியில், உறுதிப்படுத்தப்பட்ட COVID-19 கண்டறியப்பட்ட ஒவ்வொரு 1,000 பேருக்கும் 38 பேர் இறந்ததாக உலக சுகாதார நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. மக்களிடையே காணப்பட்ட இந்த இறப்பு விகிதம் – பதிவு செய்யப்பட நோயாளிகளின் இறப்பு விகிதம் (சி.எஃப்.ஆர்) என அழைக்கப்படுகிறது – இது பின்னர் வைரஸ் தோன்றிய வுஹானில் ஒவ்வொரு 1,000 பேரில் 58 பேர் இறப்புக்கு நேரிட்ட அளவில் உயர்ந்தது. ஆனால் இதுபோன்ற மதிப்பீடுகள் நோயின் கொடியத் தன்மையை மிகைப்படுத்தின. ஏனெனில் அவை வைரஸ் தொற்றுக்கு ஆளாகி, ஆனால் பதிவு செய்யப்படாத பலரையும் கணக்கிடவில்லை.
வைரஸ் பரவுவதைக் கணிக்கும் மாடல் ஆய்வுகளில் இருந்து ஐ.எஃப்.ஆரை மதிப்பிடுவதன் மூலம் ஆராய்ச்சியாளர்கள் இந்த இடைவெளியைத் தீர்க்க முயன்றனர். இந்த ஆரம்ப பகுப்பாய்வுகளின் விளைவாக, பாதிக்கப்பட்ட ஒவ்வொரு 1,000 பேருக்கும் 0.9% – 9 இறப்புகள் நேர்ந்தன என்றும், குறைந்தபட்சமாக, 0.4–3.6% இறப்புகள் நேர்ந்தன என்றும் வெரிட்டி கூறினார். அவரது சொந்த மாடலிங் ஆய்வு, சீனாவின் ஒட்டுமொத்த ஐ.எஃப்.ஆர் ஒவ்வொரு 1,000 பேருக்கும் 7 இறப்புகள் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதே சமயம், 60 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களில் ஒவ்வொரு ஆயிரத்திற்கும் 33 நபர்கள் இறந்திருக்கலாம் எனக் கணக்கிடப்பட்டது.

சீனாவில் ஒரு ஐ.எஃப்.ஆரை மதிப்பிடுவதற்கு பிப்ரவரி மாத தொடக்கத்தில் “டயமண்ட் இளவரசி” என்ற பயணக் கப்பலில் ஏற்பட்ட COVID-19 தொற்று குறித்த தகவல்களும் சேகரிக்கப்பட்டு ரஸ்ஸலின் குழுவால் பயன்படுத்தப்பட்டது. ஏறக்குறைய 3,711 பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவருமே பரிசோதிக்கப்பட்டனர், இதனால் அறிகுறிகள் இல்லாத, நோய்த்தொற்று அறியப்பட்ட என அனைவரும் கணக்கிடப்பட்டு, இறப்புகள் உள்ளிட்ட மொத்த தொற்றுநோய் கண்டவர்களை முழுமையாக ஆராய்ச்சியாளர்கள் கணக்கிட முடிந்தது. இதிலிருந்து, அவரது குழு ஒரு ஐ.எஃப்.ஆர் 0.6%, அல்லது பாதிக்கப்பட்ட ஒவ்வொரு 1,000 பேருக்கும் 6 இறப்புகள் என மதிப்பிட்டனர்.
“இந்த ஆய்வுகளின் நோக்கம் COVID-19 எவ்வளவு ஆபத்தானது என்பதைக் கணிக்கும் தோராயமான கணக்கீட்டு மதிப்பைப் பெறுவதாகும்,” என்று வெரிட்டி கூறுகிறார்.
ஆனால் ஆய்வாளர்கள், இன்னும் உறுதிப்படுத்தப்பட வேண்டிய சில சிக்கலான மதிப்பீடுகளையும் செய்ய வேண்டியிருந்தது. அதன்படி உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் உண்மையான எண்ணிக்கை குறித்த தகவல்கள் முழுமையாக உறுதிப்படுத்தப்பட்டு புதுப்பிக்கப்பட வேண்டியது அவசியமாக இருந்தது. “ஐ.எஃப்.ஆரின் விரைவான தேவைக் காரணமாக ஆரம்ப மதிப்பீடுகளைக் கொண்டு கணக்கிட்டு இருந்தாலும், பின்னர் முழுமையான தகவல்கள் கிடைத்தவுடன், அவை அதற்கேற்றவாறு புதுப்பிக்கப்பட்டு மேம்படுத்தப்பட வேண்டும்,” என்று அவர் கூறுகிறார்.
ஆன்டிபாடி கருத்துக் கணிப்புகள்
இரத்தத்தில் வைரஸுக்கு எதிரான ஆன்டிபாடி கொண்டிருக்கும் மக்களை சோதிக்க மேற்கொள்ளும் பரவலான ஆய்வுகள், “ஸீரோபிரிவலன்ஸ்” கணக்கெடுப்புகள் என அழைக்கப்படுகின்றன. இது ஐ.எஃப்.ஆர் மதிப்பீடுகளை மேலும் செம்மைப்படுத்த உதவும் என்று எதிர்பார்க்கப்பட்டது. உலகளவில் சுமார் 120 “ஸீரோபிரிவலன்ஸ்” ஆய்வுகள் நடந்து வருகின்றன. ஆனால் முதலில் பெற்ற ஆன்டிபாடி ஆய்வுகளின் முடிவுகள் குட்டையைக் குழப்பி விட்டது போலாகி விட்டது. இது வைரஸின் தன்மை எதிர்பார்த்தாற்போல கொடியதல்ல என்று கூறுகிறது. “இதனால் பெரும் குழப்பமாகிவிட்டது” என்று ரஸ்ஸல் கூறுனார்.
ஆரம்பகால ஆய்வுகளில் ஒன்று, ஜெர்மன் நகரமான கேங்கெல்ட்டில் 919 பேரில் ஆன்டிபாடி இருப்பை பரிசோதித்தது ஆகும். இங்கே பெருந்தொற்று பரவியபோது மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், சுமார் 15.5% பேர் வைரஸுக்கு எதிரான ஆன்டிபாடிகளைக் கொண்டிருந்ததாக அறியப்பட்டது. இது, அந்த நேரத்தில் நகரத்தில் COVID-19 இருந்ததாக அறியப்பட்டவர்களின் சதவீதத்தை விட ஐந்து மடங்கு அதிகம் ஆகும். இந்த எண்ணிக்கையைப் பொறுத்து 0.28% ஐ.எஃப்.ஆர் மதிப்பிடப்பட்டது. ஆனால், இந்த ஆய்வு ஒப்பீட்டளவில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான நபர்களை கொண்டு மேற்கொள்ளப்பட்டது என்பதை ஆய்வாளர்கள் பின்னர் அறிந்தனர்.

பிற ஆரம்பக் கால “ஸீரோபிரிவலன்ஸ்” ஆய்வுகள், பயன்படுத்தப்பட்ட ஆன்டிபாடி சோதனைக் கருவிகளில் உணர்திறன் மற்றும் தனித்தன்மை அல்லது மாதிரிக்காக சோதிக்கப்பட்ட அடிப்படை மக்களிடையே உள்ள முரண்பாடுகளை சரியாகக் கணக்கிடவில்லை என்று வெரிட்டி கூறுகிறது.
இந்த சிக்கல்கள் மொத்த பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் காட்டியிருக்கக் கூடும் என்றும், இதனால் வைரஸ் அபாயம் குறைவானது என்ற முடிவுகளைத் தந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அதேபோல், க்னடரியப்படாத COVID-19 இறப்புகள் – ஆம், பல நாடுகளில் இறந்துபோன அனைவரும் வைரஸ் தொற்றுக்கு பரிசொதிக்கப்படுவது இல்லை என்பதும் இந்த கணக்கீட்டை ஒரு சார்புடையதாக்குகிறது என்று தொற்றுநோயியல் நிபுணரும் மற்றும் பிஎச்.டி ஆய்வாளருமான கிதியோன் மேயரோவிட்ஸ்-கட்ஸ் கூறுகிறார். ஆஸ்திரேலியாவின் வொல்லொங்காங் பல்கலைக்கழகத்தில் பணிபுரிபவர் ஆவார்.
சமீபத்திய வாரங்களில் சில பெரிய அளவிலான “ஸீரோபிரிவலன்ஸ்” ஆய்வுகள் வெளிவந்துள்ளன. மேலும், இவை ஆரம்பகால ஆய்வுகளைவிட அதிக இறப்பு விகிதத்தை மதிப்பிட்டுள்ளன. பிரேசில் முழுவதும் 25,000 க்கும் மேற்பட்ட மக்களிடையே எடுக்கப்பட்டு, medRxiv இல் வெளியிடப்பட்ட ஒரு கணக்கெடுப்பு ஐஎஃப்ஆர் – 1% என மதிப்பிட்டுள்ளது.
ஸ்பெயின் முழுவது பரவலாக 60,000 க்கும் அதிகமானவர்களைப் பரிசோதித்த மற்றொரு கணக்கெடுப்பு 5% பாதிப்பு இருப்பதாக தெரிவிக்கிறது. ருப்பினும் முடிவுகள் முறையாகப் பகுப்பாய்வு செய்யப்படவில்லை. கணக்கெடுப்பு குழு ஒரு இறப்பு விகிதத்தை தாங்களே கணக்கிடவில்லை. ஆனால் முடிவுகளின் அடிப்படையில், ஸ்பெயினில் ஐ.எஃப்.ஆர் சுமார் 1% – அல்லது பாதிக்கப்பட்ட ஒவ்வொரு 1,000 நபர்களுக்கும் 10 இறப்புகள் இருப்பதாக வெரிட்டி மதிப்பிடுகிறது.

பல்வேறு பகுதிகளிலிருந்து அதிகரித்து வரும் ஆய்வுகள் ஐ.எஃப்.ஆர்களை 0.5–1% வரம்பில் மதிப்பிட்டுள்ளதை மிகவும் சுவாரஸ்யமான ஒன்றாக ரஸ்ஸல் மற்றும் வெரிட்டி உட்பட பல ஆராய்ச்சியாளர்கள் பார்க்கின்றனர். ஆனால் மற்ற விஞ்ஞானிகள் ஒப்பந்தத்தின் பரிந்துரைகள் குறித்து எச்சரிக்கையாக இருக்கிறார்கள். “இந்த போக்கு எல்லாவற்றையும் விட அதிக அதிர்ஷ்டம் வாய்ந்ததாக மேயரோவிட்ஸ்-காட்ஸ் கூறுகிறார்.
சாண்டாகுரூஸின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் தொற்று நோய் ஆராய்ச்சியாளரான மார்ம் கில்பாட்ரிக் மேலும் குறிப்பிடுகையில், பெரும்பாலான ஸீராலஜிக்கல் தகவல்கள் அறிவியல் ஆய்வு இதழ்களில் வெளியிடப்படவில்லை. அவை எப்போது, எப்படி சேகரிக்கப்பட்டன என்பதை அறிந்து கொள்வது கடினம். மேலும் நோய்த்தொற்று ஏற்படுவதற்கும் இறப்பதற்கும் இடையிலான தாமதத்திற்கு காரணமான ஒரு ஐ.எஃப்.ஆரை சரியாக கணக்கிடுவது மிகவும் கடினம் என்று அவர் கூறுகிறார்.
கில்பாட்ரிக் மற்றும் பிற ஆய்வாளர்கள், பல்வேறு வயது வரம்புகளைக் கொண்ட, முன்னரே பல்வேறு உடல்நலக் குறைபாடுகளைக் கொண்ட குழுக்களிடையே நடத்தப்பட்ட பெரும் அளவிலான ஆய்வு முடிவுகளிக்கு காத்திருப்பதாக தெரிவித்தனர். ஏனெனில் இந்த ஆய்வுகளே கொரோனாவின் மிகச் சரியான இறப்பு விகிதத்தை, கொரோனாவின் கொடியத் தன்மைப் பற்றிய சரியான தரவை அளிக்கும் என்று நம்புகின்றனர். வயதின் விளைவைக் கணக்கிடும் ஒரு ஆய்வு கடந்த வாரம் பதிப்புக்கு முந்தைய சேவையகத்தில் வெளியிடப்பட்டது. சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவிலிருந்து சேகரிக்கப்பட்ட தரவின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஸீரோபிரிவலன்ஸ் ஆய்வு, மொத்த மக்கள்தொகைக்கு 0.6% ஐ.எஃப்.ஆர் என்றும், 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு ஐ.எஃப்.ஆர் 5.6% என்றும் மதிப்பிடுகிறது.

இந்த முடிவுகள் இன்னும் முறையாக மதிப்பாய்வு செய்யப்படவில்லை, ஆனால் கில்பாட்ரிக் கூறுகையில், இந்த ஆய்வு முந்தைய ஸீரோபிரிவலன்ஸ் கணக்கெடுப்புகளில் உள்ள பல சிக்கல்களைக் குறிக்கிறது. “இந்த ஆய்வு அருமையானது. இது அனைத்து ஸீராலாஜிக்கல் தரவுகளையும் கொண்டு செய்யப்பட வேண்டியதுதான்” என்று அவர் கூறுகிறார்.
தமிழில்: லயா
Patrikai.com official YouTube Channel