மும்பை :
தேங்காய் எண்ணெய் மற்றும் அதன் ‘மருத்துவ பயன்கள்’ குறித்து மீண்டும் ஒரு மருத்துவ விவாதத்தை கோவிட் -19 தொற்றுநோய் ஏற்படுத்தியிருக்கிறது..
இந்தியாவின் மதிப்புமிக்க மருத்துவ பத்திரிகைகளில் ஒன்றான, JAPI (Journal of Association of Physicians), அதன் ஜூலை பதிப்பில் தேங்காய் எண்ணெய் குறித்து, அதன் நோயெதிர்ப்பு-நன்மைகள் மற்றும் ‘நுண்ணுயிரிகளுக்கு எதிராக செயல்படும் திறன்’ ஆகியவற்றை மையமாகக் கொண்டு, ஒரு மதிப்பாய்வை மேற்கொண்டனர்.
இந்த ஆய்வறிக்கையின் முக்கிய ஆசிரியர்களில் ஒருவரான, இந்திய மருத்துவக் கல்லூரியின் டீனும், கோவிட் -19 இல் மாநில அரசு பணிக்குழுவின் உறுப்பினருமான டாக்டர் சஷாங்க் ஜோஷி, தேங்காய் எண்ணெயில் லாரிக் அமிலம் உள்ளது, இது ஒரு நிறைவுற்ற கொழுப்பு அமிலம் அதை உடலில் எளிதில் கரையக்கூடியது. “இந்தியர்கள் ஏராளமான நிறைவுற்ற கொழுப்பு அமிலங்களை உட்கொள்கிறார்கள், குறிப்பாக நெய், அவை உடலின் வளர்சிதை மாற்றத்திற்கு தேவையான கொழுப்புகளின் சரியான மூலமாகும்,” என்று அவர் கூறினார்.
தேங்காய் எண்ணெய் சற்றேறக்குறைய 4,000 ஆண்டுகளாக ஆயுர்வேத மருந்தாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதனை உட்கொள்ளும்போது அல்லது உடலில் பயன்படுத்தும்போது, அது லாரிக் அமிலத்தை வெளியிடுகிறது, இது பாக்டீரியா, வைரஸ்கள் மற்றும் பூஞ்சை போன்ற நோய்க்கிருமிகளைக் கொல்லக்கூடிய மோனோலாரினை உருவாக்குகிறது.
“தேங்காய் எண்ணெய் குறித்து இந்த ஆய்வை நடத்துவதற்கு கோவிட் -19 முக்கிய காரணம் அல்ல என்றாலும், நிறைய தேங்காய் எண்ணெயை உட்கொள்ளும் கேரளர்கள் கோவிட் -19 ஐ நன்கு எதிர்த்துப் போராட முடிந்தது என்பது உண்மைதான்” என்று டாக்டர் ஜோஷி கூறினார். அதன் நோய் தீர்க்கும் சக்தி மீதான நம்பிக்கை காரணமாக, கலப்படம் இல்லாத சுத்த தேங்காய் எண்ணெயின் பயன்பாடு கடந்த சில ஆண்டுகளில் அமெரிக்காவில் அதிகரித்துள்ளது.
கோவிட் -19 போன்ற தொற்றுநோய்களிலிருந்து தேங்காய் எண்ணெய் பாதுகாக்க உதவும் என்று உறுதியாக எல்லா மருத்துவர்களும் நம்பவில்லை. அதை உறுதிப்படுத்த எந்த ஒரு அடிப்படை ஆதாரமும் இல்லை என்று பொது மருத்துவமனை மருத்துவர் ஒருவர் கூறினார். “இது ஆண்டிமைக்ரோபியல் பண்புகளைக் கொண்ட சேர்மங்களைக் கொண்டுள்ளது என்பது அறியப்படுகிறது. இது கோவிட் நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வழங்கப்படும் துத்தநாகத்தையும் கொண்டுள்ளது” என்று அந்த மருத்துவர் கூறினார். “ஆனால் தேங்காய் எண்ணெயிலிருந்து இந்த வேதிப்பொருட்கள் அனைத்தையும் மனித உடலால் எப்படி திறம்பட பிரித்து செயலாற்ற முடிகிறது என்பது எங்களுக்குத் தெரியாது” என்றும் கூறினார்.
கொழுப்பு (Lipid) நிறைந்த தேங்காய் எண்ணெய் பயன்பாடு தான் கேரள மாநிலத்தில் அதிக எண்ணிக்கையிலான இதய நோயாளிகள் இருப்பதற்கு காரணம் என்ற விவாதம் நீண்டகாலமாக நடந்து வருகிறது.
டெல்லியைச் சேர்ந்த உட்சுரப்பியல் நிபுணர் டாக்டர் அனூப் மிஸ்ரா, “தேங்காய் எண்ணெய் மனிதர்களில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாக நிரூபிக்கப்பட்டால் நான் மகிழ்ச்சியடைவேன், ஆனால் தற்போதைய வரையறுக்கப்பட்ட தகவல்கள் எனக்கு அவ்வளவு நம்பிக்கையைத் தரவில்லை” என்றார். மீன் எண்ணெயில் குறிப்பிடத்தக்க நோயெதிர்ப்பு பண்புகள் இருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது என்றார். “ஆனால் இது கோவிட் -19 நோயாளிகளுக்கு இன்னும் பரிசோதிக்கப்படவில்லை,” என்று டாக்டர் மிஸ்ரா மேலும் கூறினார்.
மார்ச் மாதத்தில் கோவிட் -19 தொற்றுநோய் இந்தியாவில் தோன்றியதிலிருந்து, இந்திய மற்றும் மாற்று மருந்துகளின் பயன்பாடு குறித்து ஒரு விவாதம் நடந்து வருகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஹோமியோபதி மற்றும் ஆயுர்வேத தயாரிப்புகளை பயன்படுத்த இந்திய சுகாதார அதிகாரிகள் ஒப்புதல் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.