சென்னை:
கொரோனா தொற்று பரவல் காரணமாக நீதிமன்ற பணிகளும் முடங்கி உள்ள நிலையில், வரும் ஜூலை 6 -ஆம் தேதி முதல் அனைத்து நீதிபதிகளும், காணொலி காட்சி மூலம் வழக்குகளை விசாரிக்க  உயர்நீதி மன்ற பதிவாளர் உத்தரவிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

இதுவரை 8 நீதிபதிகள் மட்டுமே அவசர வழக்குகளை விசாரித்து வந்த நிலையில், இனிமேல் அனைத்து நீதிபதிகளும் விசாரணை நடத்துவார்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னையில் முழு ஊரடங்கு நாளையுடன் முடிவடைய நிலையில், தளர்வுகளுடனான ஊரடங்கு ஜூலை 31ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. வரும் 6ந்தேதி முதல் பெரும்பாலான பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தின் செயல்பாடுகள் மற்றும் பணிகள் குறித்து, அனைத்து நீதிபதிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி,
வரும் 6 -ஆம் தேதி முதல் அனைத்து நீதிபதிகளும் பணியாற்றுவதாகவும், வழக்குகள் காணொளி காட்சி மூலம் மட்டுமே விசாரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இரு நீதிபதிகள் அடங்கிய 6 அமர்வுகளும், 27 தனி நீதிபதிகளும், வரும் ஜூலை 6-ஆம் தேதி முதல் வழக்கமான நடைமுறைப்படி வழக்குகளை விசாரிப்பார்கள்.
உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில், இரண்டு இரு நீதிபதிகள் அமர்வுகளும், 9 தனி நீதிபதிகளும் வழக்குகளை விசாரிப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.