
பாரிஸ்: பிரான்ஸ் நாட்டின் புதிய பிரதமராக ஜீன் காஸ்டெக்ஸ் பொறுப்பேற்பார் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார் அந்நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரோன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரான்ஸும் ஒன்று. இந்நிலையில், பிரான்ஸின் பிரதமராக பதவி வகித்த 48 வயதான எட்வர்டு பிலிப், கொரோனா வைரஸுக்கு எதிரான நடவடிக்கைகளில், சரியாக செயல்படவில்லை என்ற கருத்து நிலவுகிறது. மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில், அந்நாட்டு மக்களுக்கு, முகக் கவசம் மற்றும் மருத்துவ உபகரணங்களில் பற்றாக்குறை ஏற்பட்டதுடன், பரிசோதனைகளும் முறையாக நடைபெறவில்லை என்ற புகாரும் எழுந்தது.
இதன் எதிரொலியாக, 28ம் தேதி நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில், அதிபர் இமானுவேல் மேக்ரோன் தலைமையிலான அரசு, நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தோல்வியைத் தழுவியது. இத்தோல்வியின் காரணமாக, பிரதமர் எட்வர்டு பிலிப் சமீபத்தில் தன் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, வைரஸ் பிரச்சினையில் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்ட 55 வயதான ஜீன் காஸ்டெக்ஸ் புதிய பிரதமராக பொறுப்பேற்பார் என்று இமானுவேல் மேக்ரோன் அறிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது: எங்கள் ஆட்சியில், மீதமுள்ள இரண்டு ஆண்டுகளில், நாட்டின் பொருளாதாரத்தை புதிய வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வதற்கான, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. கடந்த மூன்றாண்டுகளாக, எட்வர்டு பிலிப் மேற்கொண்ட நடவடிக்கைகளை, நான் பாராட்டுகிறேன். இவ்வாறு, அவர் கூறினார்.
Patrikai.com official YouTube Channel