முன்பெல்லாம் திருமணங்கள் “கலகல” கொரோனா காலத்தில் “வெலவெல”
நாகர்கோவிலைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் ஸ்ரீவில்லிப்புத்தூரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது. இதற்காகப் பெண் வீட்டார் நேற்று முன்தினம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் இருந்து நாகர்கோவிலுக்கு வேன் உள்ளிட்ட வாகனங்களில் வந்தனர். ஆரல்வாய்மொழி சோதனைச்சாவடியில் இவர்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆசாரிபள்ளம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
திருமணம் முடிந்து மதிய விருந்து தடபுடலாக நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே திடீரென வந்த சுகாதார அதிகாரிகள் நடத்தப்பட்ட பரிசோதனையில் மணப்பெண்ணின் தாயாருக்குத் தொற்று இருப்பது உறுதியானதாகத் தெரிவித்து சுகாதார அவரை கையோடு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர். ஆசாரி பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவர் தற்போது கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதையடுத்து திருமணத்தில் கலந்து கொண்ட 45 பேர் குறித்த விவரங்களை அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர். தொடர்ந்து திருமணம் நடந்த அந்த வீடு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் மணமகன், மணமகள் உள்ளிட்ட பங்கேற்ற உறவினர்கள் அனைவருமே 5 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், 5 நாட்கள் கழித்து அவர்களின் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கொரோனா பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றனர். இதனால் திருமணத்தில் கலந்து கொண்ட உறவினர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.
-லெட்சுமி பிரியா