புதுடெல்லி: சீனாவின் டிக் டாக் செயலி இந்திய அரசால் தடைசெய்யப்பட்ட நிலையில், 4 லட்சம் பிபிஇ கிட்டுகளை அந்நிறுவனத்தின் இந்தியப் பிரிவு நன்கொடையாக வழங்கியதற்காக நன்றி தெரிவித்து, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி பேசிய வீடியோவை வெளியிட்டுள்ளார் திரிணாமுல் காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் மஹுவா மோய்த்ரா.
இது பாரதீய ஜனதா முகாமில் பெரிய சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில், டிக் டாக் செயலி மற்றும் அதனுடன் சேர்ந்த 58 சீன செயலிகள் தடைசெய்யப்பட்டபோது, அவை, இந்திய இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கிற்கு கேடு விளைவிப்பவையாக உள்ளன என்று மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், தற்போது அந்த தடைக்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக, மத்திய அமைச்சர் ஒருவரே, டிக் டாக் நிறுவனத்தைப் பாராட்டி, நன்றி தெரிவித்துப் பேசிய வீடியோ வெளியாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜீவ் காந்தி அறக்கட்டளை என்ற தனியார் அமைப்பிற்கு, சீன தரப்பிலிருந்து நிதி வந்தது தொடர்பாக, சம்பந்தமில்லாமல் குற்றம் சாட்டி வந்தது பாரதீய ஜனதா முகாம். அதன்பிறகு, சர்ச்சைக்குரிய ‘பிஎம் கேர்ஸ்’ நிதிக்கு சீனத் தரப்பிலிருந்து நிதி பெறப்பட்ட விபரத்தை காங்கிரஸ் வெளிப்படுத்தியது.
இந்நிலையில், ஸ்மிருதி இராணி பேசியுள்ள இந்த வீடியோ வெளியாகி, பாரதீய ஜனதா வட்டாரத்தை நெளிய வைத்துள்ளது.
அந்த வீடியோவிற்கான இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது;
https://twitter.com/MahuaMoitra/status/1278331105528041473?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1278331105528041473%7Ctwgr%5E&ref_url=https%3A%2F%2Fsplco.me%2Feng%2Ftiktok-mahua-moitra-drags-minister-smriti-irani-clip-embarrass-bjp%2F