புதுடெல்லி: என்சிஇஆர்டி பாடத்திட்டத்தில், 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணாக்கர்களுக்கென்று மாற்று கல்வி நாள்காட்டி வெளியிடப்பட்டுள்ளதை அறிவித்துள்ளார் மத்திய மனிதவள அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்.
இந்த கல்வி நாள்காட்டி, மொத்தம் 8 வாரங்களுக்கானது. இதில் பள்ளி மாணாக்கர்களுக்கான வார அளவிலான திட்டங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த கல்வி நாள்காட்டியை என்சிஇஆர்டி உருவாக்கியுள்ளது.
ஆன்லைன் வகுப்புகளை மேற்கொள்ளும் வகையில், ஆசிரியர்களுக்கு கிடைக்கப்பெறும் தொழில்நுட்ப வசதிகளின் அடிப்படையில் இது உருவாக்கப்பட்டுள்ளதாய் கூறப்படுகிறது.
தற்போதைய நிலையில், கொரோனா பரவல் காரணமாக, நாடெங்கிலும் உள்ள பல பள்ளிகள், காலத்தை வீணாக்கக்கூடாது என்ற நோக்கத்திலோ அல்லது கட்டணம் வசூலிக்க வேண்டுமென்ற நோக்கத்திலோ, ஆன்லைன் வகுப்புகளை மேற்கொண்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னதாக, துவக்கநிலை, மேல் துவக்கநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை அளவிலான மாணாக்கக்ளுக்கு, மாற்று கல்வி நாள்காட்டிகளை என்சிஇஆர்டி வடிவமைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.