சிறப்பு கட்டுரை.. : பெண்களை ஏவி அரசியல் கோதா.. தலைசுற்ற வைக்கும் லாலு குடும்பம்.
கொரோனா வைரஸ் இந்தியாவைப் பந்தாடிக்கொண்டிருந்தாலும் அரசியல் நடவடிக்கைகளுக்குப் பஞ்சம் இல்லை.
நேற்று மத்தியப்பிரதேச மந்திரி சபையை விஸ்தரித்துள்ளார், பா.ஜ.க.முதல்வர் சவுகான்.
இரு வாரங்களுக்கு முன்னர் 19 ராஜ்யசபா இடங்களுக்குத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது.
பிரியங்காவின் அரசாங்க இல்லத்தை காலி செய்ய உத்தரவு, அகமது படேலிடம் தொடரும் அமலாக்கப்பிரிவு விசாரணை என இன்னொரு பக்கம் வேறு ஒரு அரசியல்.
இந்த களேபரங்களுக்கு மத்தியில் பீகார் மாநிலத்தில் அக்டோபர் மாதம் சட்டசபைத் தேர்தல் நடக்க உள்ளது.
கொரோனாவின் மருந்தும், மாத்திரையும் தனி நபர் இடைவெளி மட்டுமே என மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ள நிலையில்-
ஒவ்வொரு பூத்திலும் ஆயிரம், இரண்டாயிரம் பேர் இன்னும் மூன்று மாதங்களில் சாரை சாரையாக ’கியூ’வில் நிற்க போகிறார்கள்.
இங்கே, தனி நபர் இடைவெளி எப்படி சாத்தியம் ஆகப்போகிறது என்பது கொரோனாவுக்கே வெளிச்சம்.
தேர்தல் தேதி அறிவிக்கப்படாவிட்டாலும், பீகாரில் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.
இந்த கட்டுரையில் லாலு கட்சி விவகாரம் மற்றும் அவரது குடும்பப் பிரச்சினை குறித்த சுவாரஸ்யமிக்க ஓர் அலசல்.
ராஷ்டிரிய ஜனதா தளம் ( ஆர்.ஜே.டி) என்ற கட்சியை நடத்தி வரும் லாலு பிரசாத் யாதவ், இப்போது மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்று ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பீகார் முதல் –அமைச்சரும் , ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதீஷ்குமாருக்கு, லாலுவின் கட்சி தான் பிரதான எதிரி.
அந்த கட்சியின் 8 எம்.எல்.சி.க்களில் 5 பேரைத் தனது கட்சிக்குள் இழுத்து, ஆர்.ஜே.டி.க்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளார், நிதீஷ்.
லாலு ஜெயிலில் இருப்பதால் அவர் இளைய மகன் தேஜ்ஸ்வி யாதவ் தான், இப்போது கட்சி விவகாரங்களைக் கவனித்து கொள்கிறார்.
ஆர்.ஜே.டி. கட்சிக்குள் நிதீஷ்குமார் ,சேதாரத்தை ஏற்படுத்துவது ஒரு புறம் இருக்க,குடும்பத்துக்குள் நடக்கும் ’கும்மா குத்துக்கள்’ தேஜஸ்வின் தூக்கத்தை தொலைத்துள்ளது.
குடும்பத்து குடுமிப்பிடி சண்டை, தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதே அவரது கவலை.
நியாயமான கவலை.
என்ன விவகாரம்?
லாலு நடத்துவது ‘சாட்ஜாத்’ குடும்ப அரசியல். இது, உலகம் அறிந்த விஷயம்.
லாலுவின் குடும்பமும், அவர் பெண் எடுத்த குடும்பமும் அரசியலில் பல ஆண்டுகளாக ஊறி இருப்பது தான் பிரச்சினையின் மையப்புள்ளி.
லாலுவின் மூத்தமகன் தேஜ் பிரதாப் யாதவுக்கு , 2 ஆண்டுகளுக்கு முன்பு ஐஸ்வர்யா ராய் என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்தார்கள்.
ஐஸ்வர்யா ராயின் அப்பா, சந்திரிகாய் ராய், எம்.எல்.ஏ.வாக இருப்பவர். லாலுவின் ஆர்.ஜே.டி. கட்சியைச் சேர்ந்தவர்..
இந்த திருமணம் தான், லாலுவின் குடும்ப சிக்கலுக்கும், அதன் தொடர்ச்சியாக உருவாகியுள்ள அரசியல் மோதலுக்கும் காரணம்.
தேஜ் பிரதாப்- ஐஸ்வர்யா ராய் தம்பதியின் இல்லற வாழ்க்கை 6 மாதம் தான் நீடித்தது.
இருவருமே விவாகரத்து கேட்டு நீதிமன்றம் சென்றுள்ளனர்.
லாலு ஜெயிலில் இருப்பதால்,அவரது குடும்பச்சண்டை தெருவுக்கு வந்து , நாறிப்போனது.
விவாகரத்து கோரி இருந்தாலும், ஐஸ்வர்யா ராய், மாமியார் ராப்ரிதேவியுடன் ( லாலு மனைவி) ஒரே வீட்டில் வசித்து வந்தார்.
ஒரு நாள் மாமியார்-மருமகள் இடையே நிஜமாகவே குடுமிப்பிடி சண்டை நடந்துள்ளது.
போலீஸ் நிலையம் வரைக்கும் விவகாரம் சென்றது. அந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் வரும் சட்டசபைத் தேர்தலில்-
லாலு குடும்பப் பிரச்சினை எதிரொலிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
லாலுவின் இளைய மகன் தேஜஸ்வி, பீகார் மாநிலச் சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவராக இருக்கிறார்.
(இவர் தான்,, ஆர்.ஜே.டி.-காங்கிரஸ் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர்.)
தேஜஸ்வியுடன் கொஞ்சக் காலம் உரசலில் இருந்த அண்ணன் தேஜ் பிரதாப் இப்போது ‘ராசி’ யாகி விட்டார்.
( நீர் அடித்து நீர் விலகுமா என்ன?)
தேஜ் பிரதாப்பை, ஏதாவது ஒரு தொகுதியில் நிறுத்த தேஜஸ்வி திட்டமிட்டுள்ளார்.
ஆனால் அவரை எப்படியும் தோற்கடித்தே தீருவது என்று சபதம் எடுத்துள்ளார், மனைவி ஐஸ்வர்யா ராய்.
கணவனை எதிர்த்து அவரே நிற்கக் கூடும். இல்லையென்றால் அவரது தந்தையும் , சிட்டிங் எம்.எல்.ஏ.வுமான சந்திரிகா ராய் நிற்பார்.
தேஜஸ்வியின் நிலை சிக்கலானது.
தனது எதிரி நிதீஷ்குமாரா? அல்லது அண்ணி, ஐஸ்வர்யாவா? என்று குழம்பினார்.
யோசித்தார்.
அண்ணனுக்குப் பெண் எடுத்த வீட்டில் இருந்தே, இன்னொரு பெண்ணை தனது வீட்டுக்குள் கொண்டு வந்து விட்டார்.
ஆம்.
தேஜஸ்வி கட்சியில் நேற்று பல் டாக்டர் கரிஷ்மா ராய் என்பவர் சேர்ந்துள்ளார்.
பாட்னாவில் உள்ள ஆர்.ஜே.டி.அலுவலகத்தில், தேஜஸ்வி முன்னிலையில் கட்சியில் இணைந்த கரிஷ்மா, வேறு யாருமல்ல.
ஐஸ்வர்யா ராயின் ஒன்று விட்ட சகோதரி.
ஐஸ்வர்யாவின் அப்பா சந்திரிகா ராயின், அண்ணன் சந்திரா ராயின் மகள் தான், கரிஷ்மா ராய்.
லாலுவின் குடும்பத்தில் குழப்பத்தை விளைவிக்க நினைத்த வேளையில், தனது குடும்பத்திலேயே, தேஜஸ்வி இப்படி ஒரு பூகம்பத்தை உருவாக்குவார் என ஐஸ்வர்யா கனவிலும் எதிர் பார்த்திருக்க மாட்டார்.
தானுண்டு, தன் வேலையுண்டு என்று இருந்த அக்காவையும் தங்கையையும் சந்தர்ப்ப சூழ்நிலை அரசியலுக்குள் குதிக்கச்செய்து விட்டது.
எதிர் எதிர் அணியில் இருக்கும் இருவரும் மோதப்போவதால், இனிமேல் பீகார் அரசியலில் அனல் பறக்கும் என எதிர் பார்க்கலாம்.
ஒரு ட்விஸ்டுடன் இந்த கட்டுரையை நிறைவு செய்யலாம்.
லாலு பெண் எடுத்த வீட்டுக் குடும்பத்தில் எல்லோரும், தங்கள் பெயருக்குப் பின்னால் ‘ராய்’ என்று ஒரு ’வாலை ‘சொருகி இருப்பது ஏன்?
ஐஸ்வர்யா-கரீஷ்மா ஆகியோரின் தாத்தா பெயர்- தாரகோ பிரசாத் ராய்.
இவர், பீகார் மாநிலத்தில் முதல்-அமைச்சராக இருந்தவர்,
இந்த குடும்பத்தின் முதல் அரசியல் வாதி.
-பா.பாரதி