டில்லி
நாடெங்கும் உள்ள தேசிய நினைவிடங்களை வரும் 6 ஆம் தேதி முதல் திறக்க உள்ளதாக மத்திய அமைச்சர் பிரகலாத் படேல் அறிவித்துள்ளார்.
நாட்டில் கொரோனா பரவுதல் அதிகரித்ததையொட்டி மக்கள் கூட்டமாக கூடுவது கடந்த மார்ச் மாதம் தடை செய்யப்பட்டது. அதன்படி மார்ச் 17 ஆம் தேதி முதல் நாடெங்கும் உள்ள 3691 நினைவிடங்கள் மற்றும் தொல்பொருள் ஆய்விடங்கள் மூடப்பட்டன.
அதன்பிறகு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் இந்த இடங்கள் திறக்கப்படவில்லை. இப்போது ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன. பல மாநிலங்களில் வழிபாட்டு தலங்கள் உள்ளிட்டவை கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டுள்ளன. சென்ற மாதம் நாட்டில் உள்ள நினைவிடங்களில் 820 திறக்கப்பட்டன.
மீதமுள்ளவைகளும் வரும் 6 ஆம் தேதி முதல் திறக்கப்பட உள்ளதாக மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் பிரகலாத் படேல் அறிவித்துள்ளார். அத்துடன் மாநில மத்திய உள்ளாட்சி நிர்வாகம் தடை விதிக்காவிடில் மட்டுமே அந்தந்த பகுதி நினைவிடங்கள் திறக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.