திருப்பதி:
திருப்பதி தேவஸ்தான ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை குறித்து சித்தூர் மாவட்ட கலெக்டர் நாராயண பரத் குப்தா செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், ஏழுமலையான் கோவிலில் தினந்தோறும் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு பல்வேறு ஊர்களில் இருந்து வருகின்றனர்.
அவ்வாறு வரக்கூடிய பக்தர்கள் மூலமாக கொரோனா பரவல் ஏற்படுகிறதா என்று பலரும் கேட்கின்றனர். ஏழுமலையான் கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்களில் இருந்து தினமும் 100 பேருக்கு சுழற்சி முறையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதேபோன்று தேவஸ்தானத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் கடந்த சில தினங்களாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவ்வாறு தேவஸ்தானத்தில் பணி புரியும் 400 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் 10க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இதில் அர்ச்சகர்கள், மேளம் வசிப்பவர்கள், விஜிலன்ஸ் ஊழியர்கள் என பலருக்கு வந்துள்ளது. தேவஸ்தான நிர்வாக அதிகாரி தினமும் பக்தர்கள் 100 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்வது போன்று தேவஸ்தானத்தில் வேலை செய்யும் ஊழியர்களுக்கும் தினமும் 100 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என கேட்டு கொண்டுள்ளார்.
அதற்கு ஏற்ப கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சாமி தரிசனத்திற்கு வரக்கூடிய பக்தர்கள் மூலமாக இதுவரை எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் கடந்த 20 நாட்களில் எந்த ஒரு பக்தருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்படவில்லை. மேலும், நாளுக்கு நாள் திருப்பதியில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வர கூடிய நிலையில், ஊரடங்கு அமல் படுத்துவதற்கான வாய்ப்புகள் இல்லை.
மத்திய அரசு தெரிவித்துள்ள நிபந்தனைகள் மற்றும் மாநில அரசின் வழிகாட்டுதலின்படி மாவட்ட நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. எனவே தற்போது திருப்பதியில் ஊரடங்கு அமல் படுத்துவதற்கான எந்தவித ஆலோசனையும் இல்லை என அவர் தெரிவித்தார்.