டில்லி

ரசு புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஒதுக்கீடு செய்துள்ள இலவச உணவு தானியங்களில் 13% மட்டுமே விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

நாடெங்கும் பரவி வரும் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர மார்ச் 25 முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.    இதையொட்டி வெளி மாநிலங்களில் இருந்து பணிக்கு வந்துள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இவர்களில் பலர் வேலை இழந்ததால் உணவு மற்றும் தங்குமிடம் இல்லாமல் தவித்து வந்தனர்,

அதையொட்டி மத்திய அரசு அனைத்து மாநிலங்களிலும் உள்ள உணவுக் கிடங்குகளில் உள்ள தானியங்கள், பருப்பு வகைகளில் இருந்து நாடு முழுவதும் உள்ள சுமார் 8 கோடி புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது.  இவ்வகையில் ரேஷன் கார்டு இல்லாதோருக்கும் இந்த உணவு வகைகள் வழங்கப்பட வேண்டும் என உத்தரவில் கூறப்பட்டது.

இதற்காக 8 லட்சம் மெட்ரிக் டன் எடை உள்ள உணவு தானியங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.  இவற்றை அந்தந்த மாநில கிடங்குகளில் இருந்து மாநில அரசுகள் பெற்று 15 நாட்களுக்குள் விநியோகிக்க உத்தரவு இடப்பட்டுள்ளது.  இது குறித்து அரசாங்க தரப்பு தகவல்களின்படி மொத்தம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 8 லட்சம் மெட்ரிக் டன்களில் மே மற்றும் ஜூன் மாதங்களில் 13% மட்டுமே விநியோகம் செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

இந்த ஒதுக்கீடு மே மற்றும் ஜூன் மாதங்களுக்கும் சேர்த்து அளிக்கப்பட்டும் இவ்வளவு குறைவாக அளிக்கப்பட்டுள்ளது.  இதில் அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்துக்கு 1.42 லட்சம் மெட்ரிக் டன் அளிக்கப்பட்டது. ஆனால் மே மாதத்தில் 3324 மெட்ரிக் டன்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.    ஜூன் மாதத்தில் மேலும் குறைவாக வழங்கப்பட்டுள்ளது.

இதைப் போல் பீகார் மாநிலத்தில் மே மாதம் 2.13% மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.  ஜூன் மாதம் ஒருவருக்குக் கூட வழங்கவில்லை.  அத்துடன் ஆந்திரா, கோவா, குஜராத், ஜார்க்கண்ட், லடாக், மகாராஷ்டிரா, மேகாலயா, ஒரிசா, தமிழகம், தெலுங்கான, மற்றும் திரிபுரா மாநிலங்களில் ஒதுக்கீடு செய்யப்பட்ட தானியங்களில் 1% கூட வழங்கப்படவில்லை.