டில்லி

ஜிஎஸ்டி குழு தற்போதுள்ள ஜிஎஸ்டி வரி விகிதங்களைச் சீரமைக்க உள்ளதாக நிதிச் செயலர் அஜய்பூஷன் பாண்டே தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ஜிஎஸ்டி வரி விகிதம் குறித்து பலரும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.  இதை மாற்றி அமைக்க வேண்டும் என அனைத்து தரப்பு மக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.   மாதா மாதம் ஜிஎஸ்டி குழுக் கூட்டம் நடைபெற்று அதில் ஜிஎஸ்டி தொடர்பான முடிவுகள் எடுக்கப்படுவது வழக்கமாகும்.

சென்ற மாதம் 12ஆம் தேதி அன்று ஜிஎஸ்டி குழுக்கூட்டம் நடைபெற்றது.  இந்த மாதம் மீண்டும் கூட்டம் கூடும் என எதிர்பார்ப்பு உள்ளது  மத்திய நிதிச் செயலர் அஜய் பூஷன் பாண்டே செய்தியாளர்களிடம், ”ஊரடங்கு காலத்தில் வர்த்தகம் முழுமையாக முடங்கிப் போனது.  இதற்காக ஜிஎஸ்டி இழப்பீடாக ரூ.1.5 லட்சம் கோடி மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த வருடம் ஜூன் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.90,917 கோடி ஆகி உள்ளது.  ஏப்ரல் மாதத்தில் ரூ.32,294 கோடியும் மே மாதத்தில் ரூ.62,009 கோடியும் வசூல் ஆகி உள்ளது.  கடந்த 2019-20 ஆம் வருடத்தில் ஜிஎஸ்டி வசூல் 9% வளர்ந்துள்ளது.  அதே வேளையில் பொருளாதார வளர்ச்சி 7% ஆக இருந்துள்ளது.

ஜிஎஸ்டி குழு விரைவில் ஜிஎஸ்டி வரி விகிதங்களைச் சீரமைக்க உள்ளது.  இந்த நடவடிக்கைகளில் ஜிஎஸ்டி வரி விகித அடுக்குகள் குறைப்பு, தகவல் தொழில்நுட்ப முன்னேற்றம் ஆகியவை இடம் பெறும்.  இந்த புதிய சீரமைப்பால் வர்த்தகம் எளிதாக நடைபெற வழி கிடைக்கும்.  இந்த சீரமைப்பானது நடப்பு நிலைக்கு ஏற்றபடி அமையும்” எனத் தெரிவித்துள்ளார்.