சாத்தான்குளம்:
விசாரணைக்கு அழைத்துச்சென்ற தந்தை மகன் உயிரிழந்த சம்பவம்நாடு முழுவதும் அதிர்வலைக ளை ஏற்படுத்தி உள்ளது, உயர்நீதிமன்றம் மதுரை உத்தரவின் பேரில, சாத்தான்குளத்தில் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த வணிகர்களான ஜெயராஜ், பென்னிக்ஸ், ஊரடங்கு நேரத்தை மீறி கடையை திறந்து வைத்ததாக கூறி, காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்று, கடுமையாக தாக்கப்பட்டதையடுத்து, அவர்கள் இருவரும் மரணம் அடைந்தனர். இந்த விவகாரம் உலகம் முழுவதும் பரவி அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது,
இந்த கொடூர சம்பவம் தொடர்பாக , உயர்நீதி மன்றம் மதுரைகிளை தாமாகவே முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
நேற்றைய விசாரணையைத் தொடர்ந்து, சிபிஐ பொறுப்பேற்கும் வரை, இந்த வழக்கை தற்காலிக மாக சிபிசிஐடி மாற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதையடுத்து நெல்லை மாவட்ட சிபிசிஐடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிபிசிஐடி டிஎஸ்பி அனில் குமார் தலைமையில் மூன்று குழுக்கள் சாத்தான்குளம் பகுதிகளில் உள்ள ஜெயராஜ், பென்னிக்ஸ் வீடு மற்றும் காவல் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றார்கள்.
இதற்கிடையில், தமிழக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி முரளி ஜெயின் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் குடும்ப உறுப்பினர்களிடம் ஆறுதல் கூறி இந்த சம்பவம் தொடர்பாக என்ன நடந்தது என கேட்டறிகின்றார். மேலும் குடும்பத்தினருக்கு உரிய நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும், குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என உறுதி அளித்து ஆறுதல் கூறினார்.
இந்த நிலையில், மாஜிஸ்திரேட் விசாரணையும் தொடர்ந்து வருகிறது. திருச்செந்தூர் அரசு விருந்தினர் மாளிகையில் சாட்சிகளிடம் மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தினார்.
காவல் நிலையத்தில் சிபிசிஐடி விசாரணை நடைபெறுவதால், மீதமுள்ள சாட்சிகளிடம் விருந்தினர் மாளிகையிலேயே விசாரணை நடத்த முடிவு செய்துள்ளார்.