டெல்லி:
டிக்டாக் உள்பட 59 சீனா செயலிகளுக்கு இந்திய அரசு தடை விதித்துள்ள நிலையில், அந்த செயலிகளை தனது பிளே ஸ்டோரில் இருந்து கூகுள் நிறுவனம் நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளது. அதுபோல, ஆப்பிள் நிறுவனமும், தனது ஆப்பிள் ஸ்டோர்ரில் இருந்து நீக்கி உள்ளது.
பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக சீன மொபைல் செயலிகளான டிக் டாக், ஷேர்சாட், யுசி பிரவுசர் உள்பட உட்பட சீன நாட்டைச் சேர்ந்த 59 செயலிகளுக்கு மத்திய அரசு நேற்று (29/06/2020) தடை விதித்தது. இதையடுத்து கூகுள் மற்றும் ஆபிள் நிறுவனங்களுக்கும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்திய மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள சீன செயலிகளில் முதன்மையானது டிக்டாக். இதன்மீது ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில், ஆபாச வீடியோக்கள் வெளியிடப்பட்டது, தனிநபர் ரகசியங்களை காப்பாற்றவில்லை என்று கூறியும் கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர் ஆகியவை சில நாட்கள் அவற்றை பிளாக் செய்து வைத்திருந்தன. இந்த செயலிகளுக்கு தடை விதிக்கக்கோரி ஏற்கனவே வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
14 இந்திய மொழிகளில் வெளியாகி உள்ள டிக்டாக் செயலியை 12 கோடி இந்தியர்கள் பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சீன செயலிகளால் இந்தியர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் லடாக் பள்ளத்தாக்கு கல்வான் எல்லைப்பகுதியில் இந்திய வீரர்கள்மீது சீனா தாக்குதல் நடத்திய விவகாரம் பூதாகாரமாக எழுந்த நிலையில், இந்திய அரசு இந்த அதிரடி தடையை விதித்துள்ளது. இது சீன தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு எதிரான மிகப்பெரிய இழப்பாக கருதப்படுகிறது.
இதுதொடர்பாக, மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், சீன செயலிகள் மீது பல்வேறு ஆதாரப்பூர்வமான புகார்கள் வந்துள்ளது. ஆண்ட்ராய்டு மற்றும் iOS இயங்குதளங்களில் கிடைக்கக்கூடிய சில மொபைல் பயன்பாடுகளை தவறாகப் பயன்படுத்துவது பற்றிய பல அறிக்கைகள் அடங்கும், “பயனர்களின் தரவை அங்கீகரிக்கப்படாத முறையில் திருடி இந்தியாவுக்கு வெளியே மற்றும் மறைமுகமாக செயல்படும் சேவையகங்களுக்கு அனுப்புகின்றன
“இந்த தரவுகளின் தொகுப்பு, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பிற்கு விரோதமான மானது, இது, இந்தியாவின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் பாதிக்கிறது, இது மிகவும் ஆழமான மற்றும் உடனடி அக்கறைக்குரிய விசயமாகும், அதைத் தொடர்ந்தே இந்த அவசர நடவடிக்கைகள் தேவைப்படுகிறது,” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஐடி சட்டம் மற்றும் விதிகளின் பிரிவு 69 ஏ இன் கீழ் தனது அதிகாரத்தை செயல்படுத்தியுள்ளதாக ஐடி அமைச்சகம் கூறியுள்ளது, மேலும் 59 செயலிகள் “இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு பாரபட்சமற்ற செயல்களில் ஈடுபட்டுள்ளன, இந்த நடவடிக்கை “கோடிக்கணக்கான இந்திய மொபைல் மற்றும் இணைய பயனர்களின் நலன்களைப் பாதுகாக்கும். இந்த முடிவு இந்திய சைபர்ஸ்பேஸின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை உறுதி செய்வதற்கான இலக்கு நடவடிக்கை” என்று தெரிவித்து உள்ளது.
இந்திய அரசின் நடவடிக்கையை தொடர்ந்து கூகுள் பிளே ஸ்டோரில் இருந்தும், ஆப்பிள் ஸ்டோரிலும் இருந்து குறிப்பிட்ட 59 செயலிகள் நீக்கப்பட்டு உள்ளன.
பிளே ஸ்டோரிலிருந்து டிக் டாக் உள்பட 59 செயலிகள், நீக்கப்பட்டாலும்கூட ஏற்கனவே அதை டவுன்லோட் செய்து வைத்துள்ளோர்கள், தொடர்ந்து அதைப் பார்க்க முடியும். வீடியோக்களை பதிவேற்றம் செய்ய முடியும். ஆனால் ஒரு முறை அதை நீக்கிவிட்டால், மறுபடி டவுன்லோட் செய்ய வாய்ப்பு கிடையாது.