சாத்தான்குளம் சம்பவத்துக்குச் சேலம் போலீசாரிடம் சண்டை போட்ட முன்னாள் எம்.பி…

தர்மபுரி தொகுதி முன்னாள் எம்.பி. அர்ச்சுனன், சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள தனது தோட்டத்துக்குச் சென்று விட்டு, காரில் சேலம் திரும்பினார்.

வழியில் உள்ள சுங்கச் சாவடியில்  ஈ-பாஸ் கேட்ட போலீசாரை அர்ச்சுனன் தாக்கியதாக அவர் மீது கருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சுங்கச்சாவடியில் போலீசாருக்கும், அர்ச்சுனனுக்கும் இடையே நடந்த வாக்குவாதம் மற்றும் கை கலப்பு    காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

என்ன தான் நடந்தது?

அர்ச்சுனன் செய்தியாளர்களிடம் அளித்த வாக்குமூலம்  இது:

‘’காரில் நான் ஓமலூரில் இருந்து சேலம் திரும்பி கொண்டிருந்தேன். அப்போது போலீசார் எனது அடையாள அட்டையை கேட்டனர். நான் இல்லை என்று கூறியதால், என்னை அங்கிருந்து போகவிட மறுத்தனர்.

அப்போது அங்கிருந்த சப்- இன்ஸ்பெக்டர் தான் என்னை முதலில் தரக்குறைவாக பேசினார்.பதிலுக்கு நானும் திட்டினேன்’’

அர்ச்சுனன் இவ்வாறு தெரிவித்துள்ள நிலையில், போலீசார் என்ன சொல்கிறார்கள்.?

‘’ முன்னாள் எம்.பி.அர்ச்சுனன் தான் முதலில் தகாத வார்த்தைகளால் எங்களை ( போலீஸ்)’ திட்டினார். எங்களை பிச்சைக்காரர்கள் என்று கூறினார்.’’ சாத்தான்குளத்தில் ஜெயராஜையும், அவர் மகன் பென்னிக்சையும் கொல்ல உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தார்கள்’’? என்று எங்களிடம் ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார்.

அவர், சப்-இன்ஸ்பெக்டரை தாக்கும் வரை நாங்கள் ( போலீஸ்) அமைதியாக இருந்தோம்’’

-இது போலீஸ் ‘ஸ்டேட்மெண்ட்’.

இந்த சம்பவத்தை அடுத்து அர்ச்சுனன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

‘விசாரணைக்குப் பின் அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும்’’ என்கிறார் சேலம் காவல்துறை துணை .ஆணையாளர் தங்கதுரை .

-பா.பாரதி.