ஒரு வாரத்திற்கு முன்பு, கோவையில் வேலாண்டிபாளையத்தைச் சேர்ந்த 77 வயதான ராமமூர்த்தி (பெயர் மாற்றப்பட்டது) க்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனாலும், அவரை காப்பாற்ற முடியவில்லை. அவரிடமிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளின் மருத்துவ பகுப்பாய்வு அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்ததாகக் காட்டியது. தற்போது அவரின் மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவிட்-19-க்கு உறுதி செய்யப்படும் அத்தகைய முதியவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் வேகமாக அதிகரித்து வருகிறது. கோவிட்-19 நோயாளிகளின் வயது வாரியான வகைப்பாடு, தமிழ்நாட்டில் வயதானவர்களிடையே கோவிட்-19 மிக விரைவாகவும், அதிகமாகவும் பரவி வருகிறது என்பதைக் காட்டுகிறது.
கடந்த 30 நாட்களில், 60 வயதிற்கு மேற்பட்ட கோவிட்-19 உறுதியான நோயாளிகளின் எண்ணிக்கை 1,451 லிருந்து 8,423 ஆக உயர்ந்துள்ளது – இது கிட்டத்தட்ட ஆறு மடங்கு உயர்வு ஆகும். இது மொத்த தொற்று உறுதியானவர்களில் 8.49%- ஆக இருந்து 11.86%-ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம், அதே காலகட்டத்தில் 0-12 வயது மற்றும் 13-60 வயது வரையுள்ள கோவிட்-19 உறுதியான நோயாளிகளின் சதவிகிதத்தில் குறையும் போக்கு துவங்கியுள்ளது. சுகாதாரத் துறையால் வழங்கப்பட்ட தகவல்களைக் கருத்தில் கொண்டால், முதியவர்கள் முன்பை விட அதிகமாக நோய்த்தொற்றுக்குள்ளாகும் போக்கு இன்னும் தொடருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை, 461 வயதானவர்களுக்கு தமிழ்நாட்டில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
“இது ஒரு எச்சரிக்கை அறிகுறி” என்று பொது சுகாதார முன்னாள் இயக்குனர் பி குழந்தைசாமி கூறினார். “நமது பாதுகாப்பு நெறிமுறைகளைப் பலப்படுத்த வேண்டும்,” என்று அவர் கூறினார்.
பாதிக்கப்படக்கூடிய வயதினரை இலக்காகக் கொண்ட சோதனைக்கு கொரோனா ஸ்பைக் புரோட்டீன் ஒரு காரணமாக இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். சுகாதார அதிகாரிகள் கடந்த ஒரு மாதத்தில் அதிக அளவிலான வயதானவர்களைப் பரிசோதித்துள்ளனர். “கோவிட் கொண்டவர்களில் அதிக எண்ணிக்கையிலான முதியவர்கள் இருப்பது, அதிக எண்ணிக்கையிலான வயதாவர்கள் பரிசோதனை செய்யப்படுவதும் ஒரு காரணமாக இருக்கலாம்” என்று ஒரு மூத்த சுகாதார அதிகாரி கூறினார். அதே நேரத்தில், வயதானவர்களிடையே வேகமாக பரவுவதற்கான வாய்ப்பை அவர்கள் நிராகரிக்கவில்லை.
வயதானவர்கள் தொற்றுநோயால் பாதிக்கப்படுவதை மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தலாம் என்று சுகாதார வல்லுநர்கள் கூறுகின்றனர் – கவனக்குறைவு காரணமாக வெளியே வருபவர்கள், கட்டுப்பாடுகளின் மீது விருப்பம் இல்லாததால் வெளியே வருபவர்கள் மற்றும் வீட்டுக்குள்ளேயே இருப்பவர்கள், ஆனால் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து நோய்தொற்று பெற்றவர்கள் என உள்ளனர்.
நோய்த்தொற்று பரவலாக இருப்பதால், அதிகமான மக்கள் தொற்றுநோய்க்கு ஆளாக நேரிடும். எனவே, வயதானவர்களின் நோய்த்தொற்று விகிதம், மொத்த மக்கள் தொகையில் வயதானவர்களின் விகிதத்திற்கு ஏற்றவாறு இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். 90 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட கோவிட் நோயாளிகளிடையே இறப்பு விகிதம் குறைந்துவிட்டாலும், இறப்பு விகிதம் 60 – 70 வயது, 70 – 80 வயது மற்றும் 80 – 90 வயது வரை கடந்த 30 நாட்களில் சுமார் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. உதாரணமாக, இறப்பு விகிதம் 80 – 90 வயதுக்குட்பட்டவர்களில் 4.23% ஆக இருந்தது. இது இப்போது 9.48% வரை உயர்ந்துள்ளது.
வயதானவர்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை முடுக்கிவிட்டதாக சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர். “நாங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மாத்திரைகளைத் தவிர ஐவர்மெக்ட்டினையும் விநியோகிக்கிறோம்” என்று மதுரை சுகாதார அதிகாரி ஒருவர் கூறினார்.
“முதியவர்கள் தங்கள் வீடுகளுக்கு வெளியே, வயதானவர்கள் தங்களின் நடமாட்டத்தை முடிந்தவரைக் கட்டுப்படுத்த வேண்டும்,” என்று குழந்தைசாமி கூறினார். “வீட்டிற்குள்ளும் குடும்ப உறுப்பினர்கள் வயதானவர்களின் அருகில் அடிக்கடி செல்வதைத் தவிர்த்து அவர்களைப் பாதுகாக்க வேண்டும். தனியாக வசிக்கும் வயதானவர்கள் வெளியே செல்லாமல், அத்தியாவசியத் தேவைகளுக்கு பிறரின் உதவியைப் பெறலாம்,” என்றார். பாதுகாப்புடன் இருப்போம்!
English: V. Mayilvaganan
தமிழில்: லயா