டெல்லி:
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை, மகன் காவல்துறையினரால் சித்ரவதை செய்யப்பட்டு, அடித்து கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், காவல்துறையினரின் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைக்கு நீதிமன்ற வழக்கறிஞர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
இதுதொடர்பாக உச்சநீதி மன்ற ரெக்கார்ட் அசோசியேஷன்தொடர்பான உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் ( Supreme Court Advocates on Record Association- SCAORA) கூட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானத்தின்படி, தமிழகத்தின் தூத்துக்குடியின் சாதான்குளத்தில் அண்மையில் நடந்த கொடூரமான மரணங்களை கண்டித்து, குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளது.
சாத்தான்குளம் வணிகர்களான ஜெயராஜ் அவரது மகன் பென்னிக்ஸ் காவல்துறையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. டிவிட்டர் சமூக வலைதளத்தில் டிரென்டிங்காகி உள்ளது.
இந்த நிலையில், உச்ச நீதி மன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில், சாத்தான்குளம் சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படும் கைதிகள் தொடர்ந்து உயிரிழந்து வருவது வேதனையும், அதிர்ச்சியையும் ஏற்ப்படுத்தியுள்ளது.
சாத்தான் குளத்தில் 19, 20 ஆகிய தேதிகளில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ் மற்றும் பென்னிஸ் ஆகியோர் அடுத்ததடுத்து உயிரிழந்தனர்.
இந்த வழக்கில் அரசு மருத்துவமனையில் கைதிகளை சோதித்த மருத்துவர் சரியாக சோதனை செய்யமால் சான்றிதழ் கொடுத்துள்ளார். அவரை சிறையில் அடைக்க அனுமதியளித்த நீதிபதியும் அவரை சரியாக சோதனை செய்யாமல் அனுமதி அளித்துள்ளார்.
ஆகவே சம்பந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதோடு அவர்கள் மீது குற்ற வழக்கையும் பதிவு செய்ய வேண்டும்.
மேலும் இது போன்ற சம்பவங்கள் இனி நிகழாமல் இருப்பதற்கு உச்சநீதிமன்றம் இதில் தலையிட்டு காவல்துறை விதிமுறைகளில் சீர்திருத்தங்களை கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.