கொல்கத்தா
மேற்கு வங்க மாநிலத்தில் பல தரப்பட்ட மக்களுக்கு இலவசமாக அளிக்க 3 கோடி முகக் கவசங்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளன.
இந்தியாவில் கொரோனா பாதிப்பில் மேற்கு வங்க மாநிலம் 7 ஆம் இடத்தில் உள்ளது, இம்மாநிலத்தில் இதுவரை 17,288 பேர் பாதிக்கப்பட்டு அதில் 639 பேர் உயிர் இழந்துள்ளனர். நேற்று வரை 14808 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனா பரவுதலைக் கட்டுப்படுத்த மேற்கு வங்க மாநிலத்தில் ஜூலை 15 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி டிவிட்டரில், “நமது சுகாதார உள்கட்டமைப்பு கொரோனாவை தடுக்க முழு தயார் நிலையில் உள்ளது. ஆனால் நாமும் கொரோனாவை தடுக்க நமது பங்களிப்பை அளிக்க வேண்டும். சமூக இடைவெளி, பாதுகாப்பு நடவடிக்கை, முகக் கவசம் ஆகியவை கொரோனாவுடன் போரிடச் சிறந்த வழிகளாகும். ஆனால் முகக் கவசம் வாங்குவது பலருக்கு எளிதானதாக இல்லை.
எனவே மேற்கு வங்க அரசு 3 கோடி முகக் கவசங்களைக் கொள்முதல் செய்ய முடிவு செய்துள்ளது. இந்த முகக் கவசங்கள், பள்ளி மாணவர்கள், 100 நாட்கள் வேலை வாய்ப்பு பெறுவோர், முன்னணி சுகாதார ஊழியர், காவல்துறை, தீயணைப்புத்துறையினர், நகராட்சி பணியாளர், சமூக நலத் தொண்டர் உள்ளிட்ட பல்வகையான மக்களுக்கு முழுவதும் இலவசமாக வழங்கப்பட உள்ளது” எனப் பதிந்துள்ளார்.