சென்னை:

கொரோனா தொற்று  பரவல் அடிப்படையில், ஊரடங்கு தொடர்பாக  மாவட்ட அளவில் முடிவு எடுக்கப்படும் என்று தமிழக மருத்துவக் குழுவின் தலைவரான  பிரதீப் கவுர் தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு வரும் 30ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, ஊரடங்கை நீட்டிக்கலாமா, தளர்த்தலாமா என்பது குறித்து, தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ள கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை மருத்துவ குழுவினர் உடன்  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று ஆலோசனை நடத்தினார்.

அதைத்தொடர்ந்து, கொரேனாவை கட்டுப்படுத்துவதற்கு ஊரடங்கு தீர்வு அல்ல என்று மருத்துவ குழுவினர் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

இந்த நிலையில், மருத்துவ குழுவின் தலைவரான பிரதீப் கவுர் தனது டிவிட்டர் பக்கத்தில், தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கை நீட்டிப்பதா, தளர்த்துவதா என்பது குறித்து  பதிவிட்டுள்ளார்.

அதில்,  மாவட்ட அளவிலான நிலைமைகளின் அடிப்படையில் கட்டுப்பாடுகள் அல்லது பூட்டுதல் குறித்து  தமிழக அரசு முடிவு எடுக்கும். முடிவெடுக்கும் போது பல்வேறு தொற்றுநோயியல் தொடர்பான அறிகுறிகள்,  கள நிலைமை பற்றிய பகுப்பாய்வு செய்து, ஊரடங்கு தொடர்பாக பரிசீலிக்கலாம்  என்று நிபுணர் குழு பரிந்துரைத்தது என்று தெரிவித்து உள்ளார்.