டெல்லி: டெல்லியில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பிளாஸ்மா வங்கி அமைக்கப்படும் என்று முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் முதல் இடத்தில் மகாராஷ்டிராவும், அடுத்த இடத்தில் டெல்லியும் உள்ளது.
டெல்லியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும் பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. டெல்லியில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 83,077 ஆக உள்ளது.
இந்நிலையில் டெல்லியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த புதிய திட்டமாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பிளாஸ்மா வங்கி அமைக்க முடிவு செய்துள்ளதாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களை சந்தித்த போது கூறியதாவது: பிளாஸ்மா வங்கி டெல்லியில் உள்ள கல்லீரல் மற்றும் பிலியரி சயின்ஸ் நிறுவனத்தில் அமைக்கப்படும்.
பிளாஸ்மா வேண்டுவோருக்கு மருத்துவரின் பரிந்துரை அடிப்படையின் பேரில் இந்த வங்கியிலிருந்து வழங்கப்படும். அதற்காக சில உதவி எண்களை அறிவிப்போம். 2 நாட்களில் பிளாஸ்மா வங்கி செயல்படத் தொடங்கும் என்று கூறினார்.