புதுடெல்லி: இந்தியாவில், மராட்டியம், ஒடிசா உள்ளிட்ட 6 மாநிலங்களில், பள்ளிக் கல்வியின் தரத்தை மேம்படுத்த வேண்டுமென்ற காரணத்திற்காக, உலக வங்கி சார்பில் ரூ.3,700 கோடி கடன் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில், மராட்டியம், இமாச்சலப் பிரதேசம், கேரளா, மத்தியப்பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான் ஆகிய ஆறு மாநிலங்களில், பள்ளிக் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்காக, ரூ.3,700 கோடி கடன் உதவி அளிக்கப்பட்டுள்ளது.
இதன்வாயிலாக, 15 லட்சம் பள்ளிகளைச் சேர்ந்த மாணாக்கர்கள் பயன் அடைவர். மேலும், ஒரு கோடிக்கும் அதிகமான ஆசிரியர்களும் இந்தத் திட்டத்தால் பயனடைவர்.
கற்பித்தல், கற்றல் மற்றும் தேர்ச்சி விகிதங்களை மேம்படுத்துதல் என்ற பெயரில், இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். நாட்டின் எதிர்கால வளர்ச்சியையும், சர்வதேச அளவில் ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறையையும் கருத்தில் வைத்து, இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணாக்கர்களின் திறனை மேம்படுத்துவதும், எதிர்கால வேலைவாய்ப்புகளுக்கு அவர்களை தயார்படுத்துவதற்கும் இந்தத் திட்டம் பெரிதும் உதவும் என்று கூறப்பட்டுள்ளது.