அலகாபாத்: சொந்த ஊரிலும், பிழைக்கச்சென்ற ஊரிலும் இருக்கின்ற மிகப்பெரிய கூலி வித்தியாசம், புலம்பெயர் தொழிலாளர்களை மீண்டும் பழைய இடத்திற்கே திரும்பத் தூண்டுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த ஜூன் 1 முதல் 24ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில், உத்திரப்பிரதேசத்திலிருந்து 191000 பேருக்கும் அதிகமானோர் ரயில்களில் மும்பைக்கு திரும்பியுள்ளனர்.

மும்பையிலிருந்து கடுமையான நரக வேதனைகளை அனுபவித்து, பல நாட்கள் பயணம் செய்து உத்திரப் பிரதேசத்திலுள்ள தங்களின் சொந்த ஊர்களை அடைந்தனர் பலர். ஆனால், அங்கு மாநில அரசு வழங்கும் வேலைவாய்ப்பின் மூலம் ஒருநாளைக்கு கிடைக்கும் கூலியின் அளவு ரூ.225க்கும் கீழ். ஆனால், மும்பையிலோ ஒரு நாளைக்கு ரூ.800 முதல் ரூ.900 வரை கிடைக்கும்.

எனவே, பிழைப்பதற்கு வேறு வழியில்லை. இதயமற்ற நகரம் என்று இகழப்பட்டாலும் மீண்டும் அதை நோக்கித்தான் சென்றாக வேண்டிய நிலை பலருக்கும்.

திட்டமிடப்படாத ஊரடங்கு துவங்கியவுடன், அங்கு நிலைத்திருப்பதற்கு வழியின்றி, ஆட்டோக்கள், சைக்கிள்கள், டிரக்குகள், டெம்போக்கள் உள்ளிட்ட கிடைத்த வாகனங்களில் மும்பையிலிருந்து கிளம்பினர் புலம்பெயர் தொழிலாளர்கள்.

ஆனால், சொந்த ஊரின் மோசமான சூழல், அவர்களில் அதிகமானோரை மீண்டும் மும்பைக்கே திரும்பச் செய்துள்ளது. சொந்த ஊரில் இல்லாத வேலை வாய்ப்புகள் மற்றும் மும்பையில் தங்களின் பணி வாய்ப்பை வேறு யாரேனும் பறித்துக் கொள்வார்களோ என்ற அச்சம் ஆகியவை அவர்களை மும்பையை நோக்கி மீண்டும் திருப்பியுள்ளது என்கின்றன தகவல்கள்.