புதுச்சேரி:

புதுச்சேரி மாநிலத்தில் ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக மத்திய அரசின் உத்தரவு மற்றும் அண்டை மாநிலமான தமிழகம் எடுக்கும் முடிவை பொறுத்து ஜீன் 30 ஆம் தேதி முடிவு செய்யப்படும் என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி, சாத்தான்குளத்தில் இரண்டு வியாபாரிகள் காவல் நிலையம் கொண்டு செல்லப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் இறந்துள்ளனர். காவல்துறையானது மனித உயிர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டுமே தவிர அவர்களே உயிர்க்கொல்லியாக இருக்கக்கூடாது. இதன் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களின் உயிர் முக்கியம். வியாபாரிகளின் சாதாரன பிரச்சனைக்காக காவல் நிலையத்தில் வைத்து துன்புறுத்துவது, சிறையில் அடைத்து பின்னர் இறப்பது காவல் துறையின் மெத்தன போக்கினாலும், காவல்துறையின் அராஜகபோக்கினாலும் நடைபெறுகிறது. இது தவிர்க்கப்பட வேண்டும். தமிழக முதல்வர் இதற்கு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களின் உயிர் பாதுகாப்பு என்பது எல்லோரும் கடைபிடிக்க வேண்டிய ஒன்று. இதனை செய்வார்கள் என்று நம்புகிறேன் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், புதுச்சேரியில் முழு முடக்கத்தை நீட்டிப்பது பற்றி ஜூன் 30-ல் முடிவு செய்யப்படும். மத்திய அரசின் உத்தரவு, அண்டை மாநிலமான தமிழகம் எடுக்கும் முடிவை பொறுத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் முதல்வர் நாராயணசாமி.