பனாஜி: சுற்றுலாவுக்குப் புகழ்பெற்ற கோவா மாநிலத்தில் கொரோனா தொற்று, சமூகப் பரவலாக மாறத் தொடங்கியுள்ளது என்று கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார்.
அவரின் இந்த அறிவிப்பு அம்மாநிலத்தில் கூடுதல் பீதியைக் கிளப்பியுள்ளது.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தைக் கடந்துள்ளது; பலி எண்ணிக்கை 16 ஆயிரத்தைத் தொட்டுள்ளது.
கோவாவில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தைக் கடந்துள்ளது. அங்கு இதுவரை 1,039 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இரண்டு நபர்கள் பலியாகியுள்ளனர். மொத்தம் 370 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில் பேசியுள்ள கோவா முதல்வர், “கோவாவில் கொரோனா தொற்று பல்வேறு பகுதிகளிலிருந்தும் கண்டறியப்பட்டு வருகிறது. இங்கு அது சமூகப் பரவலாக மாறிவிட்டது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
காவல்துறையினர் திறமையாக பணியாற்றி வருகின்றனர். ஆனால், மக்கள்தான் அவர்களுக்கு ஒத்துழைப்பு அளிப்பதில்லை. முகக்கவசம் அணிவதும், சமூக விலகலைக் கடைப்பிடிப்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது” என்றார் அவர்.