மும்பை: சீன எல்லையில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டதற்கும், ராஜிவ் அறக்கட்டளைக்கு சீனத் தூதரகம் நன்கொடை அளித்ததாக கூறப்படும் பாரதீய ஜனதாவின் குற்றச்சாட்டிற்கும் ஏதேனும் தொடர்புள்ளதா? என்று கேட்டு, பாரதீய ஜனதாவை விமர்சித்துள்ளது சிவசேனா கட்சி.

சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவின் தலையங்கத்தில் இதுதொடர்பாக கூறப்பட்டுள்ளதாவது; சீன ஊடுருவல்கள் தொடர்பாக சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்காமல், சீனாவிடம் இருந்து காங்கிரஸ் நிதி பெறுவதாக பாரதீய ஜனதாவின் தலைவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

சீன ஊடுருவல் மற்றும் 20 வீரர்களின் படுகொலைக்கும், இந்த நன்கொடைகளுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்பதை அக்கட்சிதான் தெளிவுபடுத்த வேண்டும்.

இந்நாட்டில் காங்கிரஸ் மட்டுமல்ல, பல அரசியல் தலைவர்களும், கட்சிகளும் வெளிநாடுகளின் மூலம் பலனடைந்திருக்கிறார்கள். எனவே, இதுகுறித்து பாரதீய ஜனதா பேசுவது சேற்றில் கல்லை வீசுவது போன்றது. கடந்த 6 ஆண்டுகளில் 2 முறை ஜி ஜிங் பிங் இந்தியாவிற்கு வந்துள்ளார். அவரை குஜராத்துக்கு அழைத்துச் சென்று மோடி உபசரித்தார். ஆனால், ஒரு பக்கம் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டே, மறுபக்கம் எல்லையில் தாக்குவது சீனாவின் பண்டைய வியூகம்தான்!

தற்போது, நாட்டின் கெளரவம் ஆபத்தில் உள்ளது. எப்போது வேண்டுமானாலும் காங்கிரசுடன், பாரதீய ஜனதா சண்டையிட்டுக் கொள்ளலாம். ஆனால், இது சீனாவுக்கு எதிராக போராட வேண்டிய நேரம். இப்போது அதைப்பற்றி மட்டும் பேசுங்கள் என்று கூறப்பட்டுள்ளது.