புதுச்சேரி:
அரசு செலவினத்தில் சிக்கனம் செய்யச்சொல்லும் கவர்னர் கிரண்பேடி ரூ.3லட்சம் சம்பளம் வாங்குவது ஏன்? என புதுச்சேரி மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் அதிரடியாக கேள்வி எழுப்பி உள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தில் மாநில அரசின் மக்கள் நலத்திட்டங்களுக்கு தடை போட்டு வருகிறார் ஆளுநர் கிரண்பேடி. இதன் காரணமாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கம், கவர்னருக்கும் இடையே கடந்த 4 ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது. ஏற்கனவே ரேசன் பொருட்கள் வழங்கப்படுவதை தடுத்த ஆளுநர் மேலும் பல மக்கள் நலப்பணிகளையும் முடக்கி வருகிறார். இதனால் சாமானிய மக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எதற்கெடுத் தாலும் சிக்கனம் என்று கூறி வரும் கிரண்பேடி ஆண்டுக்கு ரூ.6 கோடிவரை அரசு பணித்தை செலவு செய்து வந்தது தகவல் பெறும் உரிமை சட்டத்தில் தெரிய வந்தது.
இந்த நிலையில், அரசின் திட்டத்துக்கும், செலவினத்துக்கும் மூட்டுக்கட்டைப் போடும் ஆளுநர் மட்டும் ரூ.3 லட்சம் சம்பளம் வாங்குவது ஏன் என்று அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் கேள்வி எழுப்பி உள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கூறியதாவது, இந்த ஆண்டு மார்ச் 25-ந்தேதி முதல் கொரோனா ஊரடங்கால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியவுடன் நிவாரணம் வழங்க திட்டமிட்டு அதற்கு கோப்பு தயார் செய்து ஏப்ரல் மாதம் தலைமை செயலருக்கு அனுப்பி வைத்தோம்.
அதில், முதல்கட்டமாக புதுவை, ஏனாமிற்கு சேர்ந்து வழங்கவும், காரைக்கால், மாகிக்கு தனித்தனியே வழங்கவும் கோப்பு தயாரித்து அனுப்பப்பட்டது.
அந்த கோப்பில் மொத்தம் 19 ஆயிரத்து 100 மீனவர்கள் தடைக்கால நிவாரணம் பெறுகின்றனர். இவர்களுக்கு ரூ.12 கோடியே 6 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
ஆனால், இந்த விவகாரத்தில் கவர்னர் கிரண்பேடி வேண்டுமென்றே தலையிட்டு, தலைமை செயலருக்கு சென்ற கோப்பை பார்த்து, ஓய்வூதியம் பெறுபவர்கள், மஞ்சள் நிற ரேஷன் கார்டு வைத்துள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மீனவர்களுக்கு நிவாரணம் வழங்குவது ஏற்கனவே நடைமுறையில் உள்ள திட்டம். அதனால், இந்த கவர்னரிடம் செல்ல வேண்டிய அவசியமே இல்லை. ஆனால் கவர்னர் கிரண்பேடி வேண்டுமென்றே தலையிட்டு 4 முறை பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டி மீண்டும் மீண்டும் திருப்பி வைத்துள்ளார். மேலும், வீடு, வீடாக சென்று மீனவர்களை பற்றி வீடு வீடாக சென்று ஆய்வு செய்ய அதிகாரிகளை வலியுறுத்தி வருகிறார்.
ஆனால், தற்போதைய கொரோனா காலத்தில் ஆய்வு செய்வது சரியாக இருக்காது என்று தெரிவித்திருக்கிறோம்.
இதற்கிடையில், எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் முதல்வர் நாராயணசாமியை சந்தித்து மீனவர்களுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தினார்கள். அப்போது நடைமுறையில் உள்ள மீனவ சங்க உறுப்பினர்களுக்கான சேமிப்பு நிதியையும் வழங்க வேண்டும் என கூறியிருந்தோம். அந்த கோப்பையும் கவர்னர் கிரண்பேடி பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டி திருப்பி அனுப்பி விட்டார்.
இதுதொடர்பாக அவரை சந்திக்க அனுமதி கேட்டபோதும் அனுமதி வழங்கவில்லை. ஆனால் தடைக்கால நிவாரணம் வழங்கும்படி கவர்னர் உத்தரவிட்டதற்கான கோப்பு இதுவரை எங்களுக்கு வரவில்லை.
இந்தநிலையில் புதுவை மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கொரோனா ஊரடங்கால் மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்று பிரதமர், மத்திய உள்துறை மந்திரி ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்.
ஆனால் புதுவை கவர்னர் கிரண்பேடி நடைமுறையில் உள்ள திட்டங்களை தடுக்கிறார். பிரதமரை விட கவர்னர் உயர்ந்தவரா? புயல் காலத்திற்கான சேமிப்பு நிதியை வழங்க மத்திய அரசு ஏற்கனவே அனுமதி வழங்கி விட்டது. ஆனால் கவர்னர் கிரண்பேடி அதை வழங்க மறுக்கிறார்.
ஓய்வூதியம் பெறும் மீனவர்கள் தடைக்கால நிவாரணம் பெறக்கூடாது, புதுச்சேரி அரசு செலவினத்தில் சிக்கனம்
செய்ய வேண்டும் என்று நியாயம் பேசி வருகிறார்.
ஆனால், ஆளுனர் கிரண்பேடி ஐபிஎஸ் அதிகாரிகளுக்கான ஓய்வூதியமான ரூ.65 ஆயிரத்தை பெற்றுக் கொள்ளாமல், துணை நிலை ஆளுநருக்கான சம்பளம் ரூ.3 லட்சத்தை பெற்று வருகிறார். ஆளுநருக்கான சம்பளம் புதுச்சேரி அரசின் நிதியில் இருந்து வழங்கப்பட்டு வருகிறது.
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, முதல்வருக்கான சம்பளத்தை பெற்று கொள்வதில்லை, பாராளுமன்ற முன்னாள் உறுப்பினருக்கான ஓய்வூதியைத்தையே பெற்று வருகிறார், அதுபோல கிரண்பேடியும் ஓய்வூதிய சம்பளத்தை பெறுவதுதானே?
ஏன் ஓய்வூதியம் பெறக்கூடாது? புதுச்சேரி அரசுக்கு அதிக செலவு ஏற்படுத்துவது ஏன்? கிரண்பேடி கூறும் நியாயங்கள் அனைத்தும் அடுத்தவருக்குத் தான், அவருக்கானது இல்லை!
மீனவர்கள் புதுவை அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தவில்லை. கவர்னரை எதிர்த்து போராட்டம் நடத்துகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.